உளுந்தூர்பேட்டையில் கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 8 ஆண்டு சிறை

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் வில்வேலன் மகன் பிரகாஷ் (45). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தில் வசித்து வந்த சீனிவாசன் மகன் பாபு (55) என்பவருக்கும் இடையே வீட்டின் அருகில் இருந்த காலி மனை தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், பாபுவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாபுவுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில் வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில் நேற்று சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தீர்ப்பளித்தார்.

இடப்பிரச்சினையில் பாபுவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், கத்தியால் குத்திய பிரகாஷுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி நீதிமன்றத்துக்கு வந்த பிரகாஷை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post உளுந்தூர்பேட்டையில் கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 8 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: