மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக கூறி நண்பரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

*வேலூர் கோர்ட் தீர்ப்பு

வேலூர் : வேலூரில் மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக கூறி நண்பரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

வேலூர் கஸ்பாவைச் சேர்ந்தவர் ஜென்னா. இவரது மகன் ஜமீர் (29). பெயின்டர். இவரும் தொரப்பாடியைச் சேர்ந்தவர் ஆஸம். இவரது மகன் ஜூபேர் (27) பேக்கரி ஊழியரும் நண்பர்கள். ஜமீருக்கு கரிமா என்பவருடன் திருமணம் ஆனது.

இவர்களுக்கு குழந்தை இல்லை. ஜமீரும், ஜூபேரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் ஜமீர் வீட்டில் இல்லாத போது அவரது வீட்டிற்கு ஜூபேர் சென்று அவரது மனைவி கரிமாவிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பதை வழக்காக வைத்திருந்தார். அப்போது, ஜூபேர் தவறான எண்ணத்தில் தன்னை பார்ப்பதாகவும், தண்ணீர், காபி கொடுக்கும் போது கையை தடவுவதாகவும், ஜமீரிடம் கரிமா கூறியுள்ளார்.

இந்நிலையில் 2022ம் ஆண்டு மே 3ம் தேதி ஜமீரும், ஜூபேரும் இருவரும் மது அருந்துவதற்காக வேலூர் கோட்டை பெரியார் பூங்காவுக்கு சென்றுள்ளனர். அப்போது தனது மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பது குறித்து, ஜூபேரிடம் ஜமீர் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜூபேரின் தலையில் கல்லை போட்டு ஜமீர் கொலை செய்தார். அவரது உடலை கோட்டை அகழியில் வீசிச்விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சாந்தி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிவபிரகாசம் வாதாடினர்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக கூறி நண்பரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: