காலை 10மணி அளவில் மாயாண்டியும், அவரது கூட்டாளி ஒருவரும் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள உணவகத்தில் டீ குடித்துவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கேரள பதிவெண் கொண்ட காரில் இருந்து இறங்கிய 4 பேர் மாயாண்டியை ஓட ஓட விரட்டிச் சென்று நீதிமன்ற நுழைவாயில் அருகே 10 அடி தூரத்தில் காலை இடறி விட்டனர். கீழே விழுந்தவரை சுற்றி வளைத்து தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். வக்கீல்கள் உட்பட பொதுமக்கள் இதை நேரில் பார்த்து அலறியடித்து ஓடினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ ஊய்க்காட்டான், கொலையாளிகளை பிடிக்க ஓடினார். அதற்குள் 3 பேர் காரில் ஏறி தப்பினர். ஒருவர் மட்டும் காரில் ஏற முடியாமல் தெருவிற்குள் தப்பி ஓட முயன்றார். அவரை வக்கீல்கள் கார்த்திக் தம்பான், இருதயராஜ் ஆகியோர் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கீழநத்தம், கீழுரைச் சேர்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன் (25) என்பது தெரியவந்தது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற வாயிலில் கொலை நடந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்காததை கண்டித்து வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தப்பிய 3 பேரும் காருடன் நெல்லை தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் கீழநத்தம், வடக்கூரைச் சேர்ந்த ராஜாமணியின் தம்பி மனோராஜ் (27), அதே பகுதியைச் சேர்ந்த தங்கமகேஷ் (21), சிவா (19) என்பது தெரியவந்தது.
மாலையில் கேடிசி நகரில் முத்துக்கிருஷ்ணன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். கீழநத்தம் வடக்கூர், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜாமணி (32). திமுக பிரமுகரான இவர் கீழநத்தம் பஞ். வார்டு கவுன்சிலராக இருந்தார். பெட்டிக்கடை நடத்தி வந்த இவர் கடந்த 2023 ஆக. 13ம் தேதி அதே பகுதியில், வெள்ளிமலை நிலைய பாலம் அருகே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது, கீழநத்தம் மேலூரைச் சேர்ந்த 2 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக கீழநத்தம், மேலூரைச் சேர்ந்த மாயாண்டி என்ற பல்லா மாயாண்டி (38), கீழநத்தம், தெற்கூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு மாயாண்டி ஜாமீனில் வந்தார். இந்நிலையில் ராஜாமணியின் கொலைக்கு பழிதீர்க்க திட்டமிட்ட அவரது தம்பி மனோராஜ், நேற்று நீதிமன்ற நுழைவாயில் அருகே கூட்டாளிகளுடன் சேர்ந்து மாயாண்டியை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குபதிந்த பாளையங்கோட்டை போலீசார், 5 பேரை கைது செய்தனர். மேலும் கீழ்நத்தம் கண்ணன்(22),அனவரத நல்லூர் கண்ணன்(20) ஆகியோரும் கைதாயினர்.
The post கவுன்சிலர் கொலைக்கு பழிதீர்த்த கும்பல் நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது appeared first on Dinakaran.