காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலியின் குழந்தைகளிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து சிறுவனை படுகொலை செய்த சர்வேயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தணிகைவேல் நகரை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் ராஜேஷ் (34). அரசு ஊழியரான இவர், காஞ்சிபுரம் நில அளவை துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ராஜேஷ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி.
இவருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கருணாநிதி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் திருமணமாகி 9 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவி இடையேகருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தனலட்சுமி, தனது தாய் கருக்குபேட்டையில் நடத்திவரும் டிபன் கடையில் உதவியாக இருந்து வருகிறார். இவர்களின் டிபன் கடைக்கு மனைவியை பிரிந்து வாழும் ராஜேஷ் தினமும் வந்து டிபன் சாப்பிட்டு செல்வாராம். அப்போது தனலட்சுமிக்கும், ராஜேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளனர். இதனிடையே, குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்கு வந்து ராஜேசும், தனலட்சுமியும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜேஷ் நேற்று முன்தினம் தனலட்சுமியின் 2 குழந்தைகளையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைகளிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த ராஜேஷ், சிறுவனை சரமாரி தாக்கியதில் மயக்கமடைந்துள்ளான். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் சிறுவன் மற்றும் சிறுமியை தனலட்சுமியின் வீட்டில் படுக்கவைத்துவிட்டு ராஜேஷ் சென்றுள்ளார்.
இரவு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, குழந்தைகள் தூங்குவதாக நினைத்துள்ளார். வெகுநேரமாக சிறுவன் எழாமல் மயங்கியநிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை ஆனந்த் அளித்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், சர்வேயர் ராஜேஷ், குழந்தைகளிடம் அடிக்கடி ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அவர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் சிறுவனை தாக்கியதில் உயிரிழந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கொலை மற்றும் போச்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சர்வேயர் ராஜேஷை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓரிக்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காஞ்சிபுரம் அருகே தகாத உறவால் விபரீதம் பாலியல் தொல்லை கொடுத்து சிறுவன் படுகொலை appeared first on Dinakaran.