மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்


உளுந்தூர்பேட்டை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7பேர் பரிதாபமாக இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் ஒரு சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். வேனை வசந்தகுமார் (23) என்பவர் ஓட்டினார். கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் வேன் மோதியது.

இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கி, மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் (55), சக்தி (23), செல்வம் (50), துரை (35), ராமலிங்கம் (60), ரவி(60) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் சென்று உயிருக்கு போராடிய டிரைவர் வசந்தகுமார், படுகாயம் அடைந்த 17 பேரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி (50) என்பவர் இறந்தார்.

விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நொறுங்கி கிடந்த வேனை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டி சென்றதால் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

டூவீலர் மீது லாரி கவிழ்ந்து தம்பதி உள்பட 3 பேர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து, மினி லாரி ஒன்று கற்களை ஏற்றி கொண்டு, நேற்று மதியம் அஞ்செட்டி நோக்கி சென்றது. லாரியை உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுஜித்குமார்(30) ஓட்டி சென்றார். உடன் கோவிந்தா(20) என்பவர் சென்றார். அஞ்செட்டி மலைப்பாதையில் லாரி சென்றபோது, குந்துக்கோட்டை அருகே குறுகலான கொண்டை ஊசி வளைவில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்து கொண்டு, அஞ்செட்டியிலிருந்து தேன்கனிக்கோட்டை சென்ற டூவீலர் மற்றும் சொகுசு கார் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் டூவீலரில் சென்ற அஞ்செட்டி அருகே தக்கட்டி காலனியைச் சேர்ந்த மாதேஷ்(35), அவரது மனைவி ஜெயலட்சுமி(30), லாரியின் கேபினில் அமர்ந்து சென்ற கோவிந்தா ஆகியோர் இறந்தனர். லாரியின் பின்னால் டூவீலரில் வந்த சக்தி(27) என்பவரும் காயம் அடைந்தார். சொகுசு காரில், காரில் சென்ற சுரேஷ், நந்தினி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம்: முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜெ.எஸ். நகர் அருகில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 7 பேர் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

The post மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: