கரூர், செப். 12: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் உள்ள பிற்பட்ட, மிகப்பிற்பட்ட, சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் சலவை தொழிலை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கரியால்
இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முன்னெடுத்துள்ளது. சட்டமன்ற பேரவையில் 2024&25ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் போது, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய முன்னெடுப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரும பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனவே, இந்த திட்டத்தின் முலம் அனைத்து மாவட்டங்களிலும் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் உள்ள ஏழை, எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காஸ் மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் பெற பிற்பட்ட, மிகப்பிற்பட்ட சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.