முதல்வர் கோப்பைக்கான பரிசு இந்தாண்டு ரூ.37 கோடியாக உயர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தாண்டுக்கான பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார். சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்ததுடன், வீரர்களுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். போட்டிகளை துவக்கிவைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான போட்டிகள், வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படுவது சிறப்புக்குரியதாகும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் முதலமைச்சர் கோப்பை 2024க்கான மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 35 வகையான விளையாட்டுகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் வரும் 24ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்தாண்டுக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். கடந்த 4.8.2024 முதல் இணையதளம் வாயிலாக தமிழகம் முழுவதும் மொத்தம் 11,56,566 நபர்கள் முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர். வெற்றி, தோல்விகளை கருத்தில் கொள்ளாமல், முதலில் நாம் போட்டியில் பங்கு கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் திறன்கள் வெளிப்படும்.

பின்னர் விருப்பமான விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அரசு கூடுதல் தலைமை செயலாளர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை) அதுல்ய மிஸ்ரா, கலெக்டர் ஆஷா அஜித், எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, எம்எல்ஏ மாங்குடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் கோப்பைக்கான பரிசு இந்தாண்டு ரூ.37 கோடியாக உயர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: