சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி: ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேநேரம் அங்கு தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அதனால் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் சமீபகாலமாக ஜம்மு பகுதியில் நடந்த தீவிரவாதச் சம்பவங்களை சுட்டிக் காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவை விமர்சித்து வருகின்றன. காஷ்மீரில் கல் வீச்சு சம்பவங்கள் குறைவாக இருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து சப்ளை செய்யப்படும் தீவிரவாதம் குறைந்தபாடில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஜம்மு பகுதியில் மட்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாதிகள் பல தாக்குதல் சம்பவங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ச்சியாக தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான புள்ளிவிவரங்களின்படி, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் தீவிரவாதிகள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில், ஏராளமான வீரர்களை இந்தியா இழந்தது. தெற்காசிய தீவிரவாத இணையதள தரவுகளின்படி, ஜம்மு-காஷ்மீரில் 2010ல் 69 பாதுகாப்புப் படை வீரர்கள், 2011ல் 31, 2012ல் 18, 2013ல் 53 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2014ல் 47 ஆகவும், 2015ல் 41 ஆகவும் இருந்தது. கடந்த 2016ம் ஆண்டில் 88 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 2017ல் 83, 2018ல் 95, 2019ல் 78, 2020ல் 56, 2021ல் 45, 2022ல் 30, 2023ல் 33 வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 39 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்கள் ஆவர். ஜம்முவில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்ட போது, ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பணியாற்றிய வீரர்கள் பலர் சீன எல்லைக்கு அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக இங்குள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இதனை தீவிரவாதிகள் சாதகமாக்கிக் கொண்டனர். காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டாலும், ஜம்முவில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இன்றைய நிலையில் ஜம்முவில் வீரர்களின் எண்ணிக்கையை ராணுவம் அதிகரித்துள்ளது. ஜம்முவில் உள்ள அடர்ந்த காடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது, தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற கோஷங்களுடன் பாஜக சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது. ஜம்முவில் பாஜக பலமாக இருந்தாலும் கூட, ஜம்மு பகுதியில் தான் தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சி அடைந்த விதம் இதற்கு முன்பு நடந்ததில்லை. சமீபத்தில் லோக்சபா தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது’ என்றனர்.

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி நகர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலை இணைப்புகளில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய ஆயுதக் காவல் படைகளான மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல், தேசிய பாதுகாப்புக் காவலர் ஆகிய பிரிவுகள் விரிவான முறையில் களமிறக்கப்பட்டுள்ளது. இரவில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட மொபைல் பதுங்கு குழி வாகனங்கள் மூலமாகவும் ரோந்து நடத்தப்படுகிறது.

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், எல்லையில் ஊடுருவிய இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மோடி 14ம் தேதி ஜம்மு பயணம்
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் ஜம்மு – காஷ்மீரில் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த நிலையில், வரும் 14ம் தேதி ஜம்முவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதேபோல் பாஜக மூத்த தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்களும் பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸ் கட்சியை ெபாறுத்தமட்டில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் ஜம்மு – காஷ்மீரில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

The post சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: