திருக்குறளின் தனித்துவம்

திருக்குறளானது ஆண்டவனை மட்டுமே ஏற்றிப்போற்றாமல் மனிதனும் ஆண்டவனின் நிலையை எய்தமுடியும் என்று சொல்கிறது. அப்படிச் சொல்வதோடு, செல்வதற்கான படிகளையும் காட்டுகிறது.தெய்வத்தினால் செய்ய முடியாததையும் மனிதன் தன் முயற்சியால் செய்யமுடியும் என்பதை, ‘‘தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்’’ என்ற குறளில் குறிப்பிடுகிறார். உடம்பு வருந்தும் அளவிற்கு ஒருவன் முழுமையாக முயற்சி செய்தால் அது முழுமையான பலனைத்தரும். அப்படி முயற்சி செய்து மேற்கொள்ளும் வினையே திருவினையாக மாறுகிறது. இதை “முயற்சி திருவினையாக்கும்” என்ற அடி எடுத்தியம்புகிறது. தன் வினையை நொந்துகொண்டு இருப்பவர்கள் முயற்சி செய்தால் வினையையே திருவினையாகத் திருத்தியமைக்கலாம். ஊழையும் உப்பக்கம் காணலாம். இவ்வண்ணம், முயற்சியால் முன்நிற்பவர்கள் செய்யும் செயல்கள் யாவும் அரியவை ஆகும். ஏனெனில் அவர்கள் கடவுளாலும் முடியாதவற்றையும்கூடத் தம் முயற்சியால் முடித்துக் காட்டுகிறார்கள். அரிய செயலை மேற்கொள்வோர் பெரியவர்களாக விளங்குகின்றனர். மற்றோர் சிறியோர் ஆவர். இதை,
“செயற்கரிய செய்வர் பெரியோர், சிறியோர்
செயற்கரிய செய்கலா தார்”

என்ற திருக்குறள் சுட்டுகிறது. செயற்கரிய செய்தோரின் புராணமே பெரிய புராணமாகப் போற்றப்படுகிறது. அப்படி, செயல்களைச் செய்தாலும் ‘நான்தான் செய்தேன்’ என்ற செருக்கு ஒருவனுக்கு இருக்குமாயின் அவனுடைய வாழ்க்கையில் பகலும்கூட இருளாகக் காட்சியளிக்கும்.செயலைச் செய்துவிட்டும் சுயவிளம்பரமின்றி அடங்கி நடப்பவனின் தோற்றமானது மலையைவிடவும் பெரியது
என்கிறார் திருவள்ளுவர்.
“நிலையிற் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”

என்ற திருக்குறளில் மலையை உவமையாக்கக் காரணம், பூமியில் உயர்ந்த பகுதி என்பதாலும் அங்கு கிடைக்கின்ற பொருட்கள் உயர்வானது என்பதாலும்தான் மலையில் கிடைக்கும் தேன் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நிலையில் திரிந்து கெடாது. இங்கு பூக்கும் குறிஞ்சி பன்னிரு ஆண்டு தாவரத்தின் தவத்தாலே பூக்கிறது. இங்கு உருவாகும் சுனையும் அருவியுமே அனைத்து நீர்நிலைகளுக்கும் நீரை வழங்குகின்றன. ஆகவே இத்துணை சிறப்புகளுடைய மலையைவிடவும் பெரியது அடங்கியவனின் தோற்றமாகும் என்பது விரிபொருளாகும். அடங்கி நடப்பவனே அமரருள் ஒருவனாக அமர்த்தப்படுவான். இதை, “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்கிறார் திருவள்ளுவர். அமரத்தன்மையில் அமர, அதிகமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு மன்னனாக ஒருவன் இருந்தால் மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்ததால் கடவுளாகக் கருதப்படுவான் என,
“முறை செய்து காப்பாற்றும் மன்னன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”என்கிறது பொதுமறை.

சாதாரண மனிதனாக இருந்தால் வெறுமனே கொள்கையன்றி, பிறருக்குப் பயனின்றி வாழாமல் வாழ்வாங்கு வாழவேண்டும். அப்படி வாழ்ந்தாலே போதும். கடவுளிடத்தில் கண்டிப்பாக இடமுண்டு. அதனை,
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

என்ற திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.ஆகவே மனிதன் இயல்பு நிலையிலேயே வாழ்வாங்கு வாழவேண்டும். அப்படி வாழ்வது இறைநிலையை இப்பூவுலகிலேயே தந்துவிடும். அடக்கமே செயல்களுக்கு அடிப்படை இலக்கணமாகும். ஒரு செயலைச் செய்துவிட்டு ஓரா யிரம் விளம்பரம் செய்யும் அடக்கமின்மை அதிக துன்பத்தைத் தரும். இதனால், விளம்பரத்தை விட்டுவிட்டு வாழ்வாங்கு வாழ்வதே கடவுள்நிலை அடைவதற்கான வழி என்பது வள்ளுவர் காட்டும் வழி.

The post திருக்குறளின் தனித்துவம் appeared first on Dinakaran.

Related Stories: