வளங்களை வாரி வழங்கும் வாமனன்

யார் இந்த வாமனன்?

தேவர்களும் அசுரர்களும் அதிதியின் பிள்ளைகள். தந்தை கஸ்ய பிரஜாபதி. அசுரர்களின் ராஜாவும், பிரகலாதனின் பேரனுமான மகாபலிச் சக்க ரவர்த்தி, மிகப்பெரிய பலத்தோடு யாகங்கள் பல செய்தான். அதன் மூலம் பெற்ற பல்வேறு வரங்களும் ஆயுதங்களும் கொண்டு போர்புரிந்தான். தேவர்களை விரட்டிவிட்டான் . தேவர்களுக்கு நாடு நகரம் இல்லாமல் போயிற்று.தன் பிள்ளைகள் துன்பப்படுவதைக் கண்டு தாயான அதிதி தேவி மிகவும் துக்கப்பட்டாள் . இதற்கு ஒரே வழி பகவானை சரணடைவது தான் என்று சொல்லி பயோ விரதம் என்ற ஒரு விரதத்தை கஸ்ய பிரஜாபதி அனுஷ்டிக்கச் சொன்னார். அந்த விரதத்தின் பலனாக பகவான் ஸ்ரீமன் நாராயணன் காட்சிதந்து “மகாபலி சக்கரவர்த்தியை போர் புரிந்து வெல்லமுடியாது. அடுத்து அவன் பிரகலாதன் வம்சத்தில் தோன்றியதால், பிரகலாதனுக்கு தந்த வரத்தின்படி, அவனைக் கொல்ல முடியாது. இந்திரனுக்கும் வாழ்வு தர வேண்டும். மகாபலி சக்கரவர்த்திக்கும் வாழ்வு தர வேண்டும். எனவே நானே உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்” என்று சொல்லி கஸ்ய பிரஜாபதிக்கும் அதிதிக்கும் மகனாக அவதரித்தார். அவர் அவதரித்த காலம் புரட்டாசி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரம் துவாதசி நாள். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது போலவே, ஒவ் வொரு துவாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. புரட்டாசி மாத வளர்பிறை துவா தசிக்கு வாமன துவாதசி என்று பெயர். விஜய துவாதசி என்றும் பெயர். இந்த துவாதசியில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றி அடையும்.

எப்படி அவதரித்தார்?

அவருடைய அவதார விசேஷத்தை ஸ்ரீமத் பாகவதம் அற்புதமாக விவரிக் கிறது. மதுராவில் பின்னால் கண்ணன் எப்படி அவதரிக்கப் போகிறாரோ, அதற்கு முன்னோடியாக வாமனன் அவதரித்தார். இரண்டு காதுகளிலும் அற்புதமான பொற் குண்டலங்கள் அசைந்தாடியது.
தோள்வளை,கங்கணமும் தோள்களில் ஜொலித்தது. மார்பிலே ஸ்ரீவத்ஸம் என்னும் மறு பிரகாசித்தது. கால்களிலே தண்டையும் சிலம்பும் அசைந்து பிரணவாகார ஒலியை எழுப்பியது.

மார்பில் அழகான வன மாலை தவழ்ந்தது.

கொள்ளை கொள்ளும் புன்னகையுடனும், நான்கு கரங்களுடனும், சியாமள மேனி வண்ணனாக பகவான் அவதாரம் செய்தார். இந்திரனுக்கு தம்பியாக அவதாரம் செய்ததால் அவருக்கு உபேந்திரன் என்கிற திருநாமமும் உண்டு அவர் அவதாரம் செய்த பொழுது தேவ துந்துபிகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ரிஷிகளும் முனிவர்களும் அவரை வரவேற்று தோத் திரங்கள் பாடினர். சித்தர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும் மங்கலமான பாடல்களை இசைத்தனர்.

திருவோண நட்சத்திரத்தின் சிறப்பு

அவர் அவதாரம் செய்த திருநட்சத்திரம் சிரவண நட்சத்திரம் என்று அழைக்கப்படும் திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் திரு என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நட்சத்திரங்கள். திருவோணம் சந்திரனுக்குரிய நட்சத்திரம். சந்திரனுக்குரிய ராசி கடக ராசி நான்காவது ராசி. வித்தையையும், சொத்தையும், பூமி, வீடு, வாசல், முதலியவற்றைச் சொல்லும் ராசி. வாமன அவதார மாதம் புரட்டாசி மாதம். கன்னி ராசி மாதம் . ஆறாவது ராசி. வெற்றியைக் குறிக்கும் ராசி.
திருவோண நட்சத்திரம் இருக்கக்கூடிய ராசி மகர ராசி. பத்தாவது ராசி. கர்மாவைக் குறிக்கக்கூடிய ராசி. செயலைக் குறிக்கக்கூடிய ராசி. கௌரவத்தைக் குறிக்கக்கூடிய ராசி. புகழைக் குறிக்கக்கூடிய ராசி.

மஹாபலி கதை

பொதுவாக வாமன அவதாரத்தின் கதை ஒரே விதமாகவே புராணங் களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டு இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் இந்தக் கதைகளின் அமைப்புக்கள் வேதங்களிலும் புராணங் களிலும் வெவ்வேறு விதமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் பிரதானமான கதைதான் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு திரிவிக்கிரம அவதாரமாக மாறி மண்ணையும் விண்ணையும் அளந்தது.பிரகலாதனின் பேரனான மகாபலி சக்கரவர்த்தி சகல லோகங்களையும் வென்றான்.. 100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழு மையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

இந்திரன் தன்னுடைய உலகத்தை தனக்கு எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்திக்க, அவர் “ மகாபலி பிரக லாதனின் பேரன் ஆக இருப்பதால், சண்டை செய்ய விரும்பாது, பிரம்மச் சாரியாக சென்று யாசித்து, இந்திரனின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று எடுத்த அவதாரமே வாமன அவதாரம். பிறகு அவன் பலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்று அடி மண் கேட்க, அவரும், ‘‘இந்த சிறு பிள்ளை பாவம், மூன்று அடி மண் தானே கேட் கிறான். தந்தால் என்ன குறைந்து விடப் போகிறது” என்று தானம் தரச் சம்மதிக்கிறான்.பகவான் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்தான். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு,பலிச் சக்கரவர்த்தியின் தலையில் திருவடியை வைத்து, பாதாள உலகத்துக்கு அனுப்பினார் என்பது கதை.மகாபலி கேரள தேசத்தை ஆண்ட மன்னனாகவும், அவன் பாதாள உலகத்தில் இருந்து, வருடம் ஒரு முறை தன்னுடைய மக்களைப் பார்ப்பதற்காக வருவதாகவும், அவன் வரும் நாளே திருவோண நன்னாள் என்றும் கேரள மக்கள் கருதி, பாரம்பரிய திருவிழாவாக ஓணம் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

The post வளங்களை வாரி வழங்கும் வாமனன் appeared first on Dinakaran.

Related Stories: