மாதவம்

பகுதி 2

அவர் நிச்சயமாக வாயைத் திறந்து எந்த பதிலையும் சொல்லப் போவதில்லை என்பதை உணர எனக்குச் சிறிது நேரம்தான் பிடித்தது. ஏதோ ஒரு வலிமையான காரணம். அதனால் இவர் வாய் மூடி மௌனமாய் இருக்கிறார். என்னவாக இருக்கக்கூடும்? என்னால் ஊகிக்கக் கூட முடியவில்லை.“தந்தையே என்னால் இந்த நிலையை தாங்கிக் கொள்ள இயலவில்லை எனக்கு எதுவும் விளங்கவும் இல்லை ஏதோ நடக்க கூடாத ஒரு நிகழ்வு இங்கு நடந்தேறி இருக்கிறது அதில் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. தாயைப் பிரிந்து நான் படும் துயரம் ஒரு புறம். என்னை பிரிந்து என் தாய் என்ன அவதியை அனுபவிக்கிறாளோ? எனக்குத் தெரியவில்லை. நீங்கள் பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது இன்னமும் எனக்கு பயத்தை அளிக்கிறது. என் தாய் உயிரோடுதான் இருக்கிறாளா? இருக்கிறாள் எனில் எங்கே இருக்கிறாள்? சொல்லுங்கள்.

தாய் இருக்கிறாளா? இல்லையா?

எதுவும் தெரியவில்லை. தந்தையான உங்களுக்கும் இதைப்பற்றிப் பேசுவதற்கு மனதில்லை. இனி என்னுடைய விதியின் படி எல்லாம் நடக்கட்டும். இங்கேயே இப்பொழுதே நான் என் உயிரை மாய்த்துக் கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக ஏதாவது மனதிற்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் போது பிரம்ம லிபியால் நடக்கிறது என்பார்கள். ஆனால் நான், பிரம்மதேவனின் பேரன். எனக்கும் இந்த நிலைதான் போலும். இதோ நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். என் வாழ்வு இன்றே முடியட்டும்.’’ கௌதமர் கால் தொட்டு வணங்கினேன், “அம்மா எங்கே அம்மா எங்கே’’ என்று பிதற்றிய படியே அவரை விட்டுத் தள்ளி நடக்கத் துவங்கினேன்.

அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரது கண்களை உற்று நோக்கினேன். கடைசியாக இறைஞ்சும் குரலில், “அம்மா எங்கே? சொல்லக் கூடாதா?”கௌதம முனிவர் தனது வலது கையை நீட்டி ஆள்காட்டி விரலால் ஒரு பெரிய கல்லை காட்டினார். பிறகு, தன் கண்களை மூடிக் கொண்டார். நான் அப்பொழுதுதான் அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்த கல்லை கவனித்தேன்.
அந்தக் கல்லின் அருகில் சென்றேன். மண்டியிட்டு அமர்ந்தேன். அந்தக் கல்லை தடவி கொடுத்தேன். எனக்குத் என் தாயின் ஸ்பரிசம் நினைவுக்கு வந்தது. கல்லில் இருந்து எப்படி என்னால் என் தாயின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது? இது என்ன பேதமையா? ஆனாலும், என் உள்ளுணர்வு இது என் தாய்தான் என்று சொல்லிய வண்ணம் இருந்தது.

மனதிற்குள் தாயின் தாலாட்டு,‘சதானந்தா தாலேலோ’ ஓடியது. ‘அம்மா நான் எந்த கேள்வியும் கேட்க வரவில்லை. இப்பொழுது நான் என்ன கேட்கக்கூடும்? அதற்கு என்ன பதில்தான் கிடைக்கக்கூடும்? என்னுடைய நிலை யாருக்கும் வரவேண்டாம். என் தந்தை கௌதம முனிவர், முதலில் அவருக்கு முனிவர் என்பதில்தான் முக்கியத்துவம். பிறகுதான் அவர் உனது கணவராக, எனது தந்தையாக இருந்திருக்கிறார். அதில் குற்றம் ஏதுமில்லை. அது அவரின் நிலைப்பாடு. ஒரு முனிவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் இப்பொழுது வாய் மூடி மௌனமாய் இருப்பது எதனால் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் தந்தை நிச்சயமாக எந்தத் தவறும் இழைத்திருக்க மாட்டார் என நம்புகிறேன்.

இப்பொழுது நான் கூறுவது உனக்கு கேட்கிறதா? பொதுவாக எல்லோரும் தனக்கு பிடித்தமான தெய்வத்தை கல்லில் சிலையாக வடித்து வணங்குவார்கள். ஆனால், எனக்கு தெய்வத்திற்கும் மேலான நீ இன்று கல்லாய் இருக்கிறாய். இது காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம். இதை நான் எப்படி கடக்க வேண்டும் என்பதை நீதான் என் உள்ளுணர்வில் புரிய வைக்க வேண்டும். நீ கண்டிப்பாகச் செய்வாய். இங்கு நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வு என்ன?

இதற்கு காரணம் யார்? என்று அறிந்து கொள்ளவோ அல்லது ஆராய்ச்சி செய்யவோ எந்த முயற்சியும் நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அது ஒரு வீண் முயற்சிதான்.
அது நடந்து முடிந்த செயல். மற்றவர்களுக்கு அது ஒரு சுவாரஸ்யமான கதையாக இருக்கக் கூடும். ஆனால், அதில் எவ்வளவு உண்மை இருப்பினும் என்னைப் பொருத்தவரையில் என் தாயான நீ சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு பவித்திரமான விஷயம்தான். அதில் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதுதான் ஒரு மகனுக்கு அழகு. நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்கே புரியவில்லை. இதைச் சொல்வதும் உள்ளிருந்து நீதான். இப்பொழுது நான் செய்யப் போவது இங்கேயே கண் மூடி அமர்ந்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என் உள் உணர்வில் தோன்றி எனக்கு வழிகாட்டு.

எப்போதும் என்னுடனே இரு.’ எனக்கு விழிப்பும் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் இருந்த ஒரு நிலையில் என் மனதில் ஒரு மகா வாக்கியம் தோன்றிற்று. ‘தசரதகுமாரன் ஸ்ரீராமன் வரும் நாள் வரை இந்த மா தவம் தொடரும்.’ நான் ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன். நான் இனி எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் என் தாய் விருப்பப்பட்டபடி நான் வேத விற்பன்னராக வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்க வேண்டும். என் தாயும் தந்தையும் கண்டிப்பாக எங்கிருந்தாலும் எனக்கு ஆசையை நல்குவார்கள். எழுந்திருந்தேன்.

கல்லை நமஸ்கரித்தேன். திரும்பிப் பார்த்தேன். தந்தை இருந்த இடத்தில் இப்பொழுது அவர் அமர்ந்திருக்கவில்லை. அந்த இடத்தை நோக்கி வணங்கினேன். கிழக்கு நோக்கிப் பயணம் செய்யஆரம்பித்தேன். தசரதகுமாரன் ஸ்ரீராமன் வரும் நாளை எதிர்நோக்கி என் தாய், கல்லில் தவம் செய்தபடி இருந்தாள். என் தந்தை கௌதம முனிவரும் ஏதோ ஒரு இடத்தில் தன் தவத்தை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். நானும் வேதம் கற்றபடியே என்னுடைய பிரார்த்தனையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். மூவரும் மூன்று வெவ்வேரிடத்தில் இருந்த போதிலும் எங்கள் எண்ணங்களால் தொடர்பு கொண்டிருந்தோம்.

அந்த நாளும் வந்துவிட்டது! அன்று என்ன நடந்தது என்பதை நான் அறிந்தவரையில் கூறுகிறேன். அந்த ஆசிரமம் நிறைய கோடை குளிர், மழை, வசந்த காலங்களை பார்த்து விட்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குளிர் காலத்தில் ஒரு அதிகாலைப் பொழுதில் ராமனும், இலக்குவனும் விஸ்வாமித்திரரும் ஆசிரமத்தைக் கடந்துச் சென்று கொண்டிருந்தார்கள். விஸ்வாமித்திரர் தன்னுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வைப் பற்றி அவர்களிடம் விவரித்துக் கூறியபடி இருந்தார்.

அப்பொழுது ராமன் பாதத்திலிருந்து ஒரு துகள் அந்தக் கல்லின் மீது பட்டது. அதே நொடியில், அந்தக் கல்லிலிருந்து அகலிகை, என் தாய் வெளிப்பட்டாள். ராமன், “யார் இந்த மங்கை?” என்று விஸ்வாமித்திரரை வினவினார். விஸ்வாமித்திரர், ராமனின் அருகில் சென்று, அகலிகையின் வரலாறை மெதுவாக எடுத்துக் கூறினார். ராமன் அகலிகையிடம் சென்று, “எனக்கு எல்லா விவரமும் தெரியும்.

நீங்கள் என் தாய் போன்றவர்! இதை நான் ஏதோ ஒரு அலங்காரத்திற்காகக் கூறவில்லை. என்னுடைய தாய் கௌசல்யை பன்னிரெண்டு மாதங்கள் வயிற்றில் சுமந்து என்னை ஈன்றாள், என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் எவ்வளவோ வருடமாக என்னை உங்கள் மனதில் சுமந்துவந்திருக்கிறீர்கள். நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும். உங்களது தவம் அளவிட முடியாதது. “மா தவம்!” என்று கைகூப்பி வணங்கினார்.

கௌதம முனிவர் இருக்கும் இடத்தை அடைந்து அவரிடம் விஸ்வாமித்திரர், “இதோ உங்கள் அகலிகை. உங்களின் திருமணத்தின்போது எப்படி இருந்தாளோ அதே போன்று இருக்கிறாள்.
இவளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவள் பதிவிரதை.” என்று கூறினார். கௌதம முனிவர் மிகுந்த சந்தோஷத்துடன் அகலிகையை ஏற்றுக் கொண்டார். விஸ்வாமித்திரரின் மனதில் அயோத்தியில் கிளம்பிய நாள் முதல், இந்த நாள் வரையில் நடந்த இரண்டு பெரிய நிகழ்வுகளான தாடகை வதமும் அகலிகையின் சாப விமோசனமும் வந்து சென்றது.
“ராமா! உன் கை வண்ணம் அங்குகண்டேன். உன் கால் வண்ணம் இங்கு கண்டேன்.” என்று கூறினார்.

“ராமா! பொதுவாக ஒருவர் தன்னுடைய கைகளைக் கொண்டு ஆக்கபூர்வமாக நிறைய செயல்கள் செய்யக்கூடும். குறிப்பாக, ஆசி கூறுவதற்கு கைகளைத்தான் உபயோகப்படுத்துவோம். ஆனால், நீ உன் கைகளால் அம்பை எய்து தாடகையை வதம் செய்தாய். அதற்கு மாறாக, கால்களைக் கொண்டு யாரும் அருள் செய்யக்கூடும் என்பது நான் அறியாதது. உன் காலில் இருந்து வெளிப்பட்ட ஒரு துகள் கல்லாய் இருந்த அகலிகை சாபம் நீங்கி விமோசனம் அளித்தது. இங்கே உன் கால் வண்ணம் கண்டேன்.!”

விஸ்வாமித்திரருக்கு பெருமிதத்தில் நெகிழ்ச்சியாக இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விஸ்வாமித்திரர் மிதிலை நகரம் அடைந்தவுடன் சதானந்தனான என்னை அழைத்து, “உன்னுடைய தாய் தந்தையர் இருவரும் இணைந்து விட்டார்கள்” என்று கூறி என் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். ராமனின் முன்னிலையில் இது நிகழ்ந்தது. இதைவிட பாக்கியம் எனக்கு என்ன வேண்டும். ராமன் அருளின் ஆழியான்தான். அவன் என் தாயின் மா தவத்தை அங்கீகரித்தது மட்டுமல்ல, என்னையும் சீதா ராம கல்யாணத்தில் ஒரு பங்கு வகிக்கவும் செய்ததில் அவனின் பேரருள் விளங்கியது. என் நெஞ்சம் நன்றியில் விம்மியது.

தொகுப்பு: கோதண்டராமன்

The post மாதவம் appeared first on Dinakaran.

Related Stories: