தலைச்சங்க நாண்மதியம் நாண்மதியப் பெருமாள்

தலைச்சங்க நாண்மதியம் ஊருக்கு எப்படிப் போவது?’ என்று மயிலாடுதுறையில் யாரையாவது கேட்டோமானால் அவர்கள் நம்மை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஆனால் முதல் சொல்லின் உச்சரிப்பை வைத்துச் சரியான வழிகாட்டக்கூடியவர்களும் இருப்பார்கள். ஆமாம், இந்தத் தலத்தை ‘தலச்சங்காடு’ என்று கொஞ்சம் கொச்சையாகக் குறிப்பிட்டால்தான் பெரும்பாலோருக்குப் புரிகிறது. தெய்வத் திருத்தலத்தின் பெயரை முழுமையாக உச்சரிக்க விடாமல் சோம்பல் செய்த சதியின் விளைவு இது! ஆனால், திருஸ்ரீரங்கநாதன் பள்ளி, திருச்சிராப்பள்ளியாகி, திருச்சியாக சுருங்கிவிட்டதையும், துலை,வில்லி,மங்கலம் என்று பிரித்து அழைக்கப்பட்ட தலம், தொலைவில்லிமங்கலம் (அப்படி என்றால் என்ன?) என்றாகிவிட்டதையும், காழிச்சீராம விண்ணகரம், தடம் புரண்டு சீர்காழியாக மாறியதையும், திருத்தண்கால், சம்பந்தமேயில்லாமல் திருத்தங்கல் என்றானதையும், திருமெய்யம், அர்த்தம் மாறி திருமயமானதையும் வைத்துப் பார்த்தால் தலச்சங்காட்டையும் இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் பக்தர்கள் இது போன்ற கோயில்களில் அதிக அளவில் புழங்குவதற்கு இந்தப் பெயர் மாற்றம் தடையாக இல்லை என்பது பெரிய ஆறுதல். பெயர் உச்சரிப்பில் மாற்றம் கேலிக்குரியதாக இல்லாததும், புரிபட சற்று நேரமானாலும் சரியாக வழிகாட்டப்படுவதும் கூடுதல் ஆறுதல். இதையெல்லாம் பார்த்துகொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் கோயில் கருவறையில், பெருமாள் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை, மகத்தான ஆறுதல்!இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் தலைச்சங்க நாண்மதியத்தை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையாழ்வார் மட்டும்தான். அவரும் பிற தலங்களை செய்ததுபோல பல பாசுரங்களையோ, அல்லது ஒரு பாசுரத்தையோ பாடாமல், ஒரே ஒரு வரியால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்பது இன்னும் வியப்பு தருகிறது.
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங்கென்றுகொலோ
– என்று உளம் கசிந்து பாடுகிறார்.
இந்தப் பாசுரத்தின் நயம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது. ‘கண்ணார் கண்ணபுரம்’ என்று இந்த திருக்கண்ணபுரத்தை வர்ணித்திருப்பது வெகு அருமை. வைத்த கண் வாங்காமல் பார்க்குமளவுக்கு எழில் மிகுந்த ஊராம், இந்த திருக்கண்ணபுரம்! அதாவது வேறு காட்சி எதையும் காண விரும்பாதபடி கண்களை ஈர்த்து, தன்னை விட்டகலாதபடி வைத்திருக்கும் ஊர்! அடுத்ததாக கடிகை என்று சோளிங்கபுரத்தையும் நினைவுபடுத்துகிறார். இந்த இரண்டு ஊர்களையும் குறிப்பிட்ட ஆழ்வார், தலைச்சங்க நாண்மதியத் தலைவனைக் கண்ணாரக் கண்டு தான் களிக்கும் நாள் எந்நாளோ என்று ஏக்கமாகப் பாடுகிறார்.

ஆக, இந்த ஒரு வரியில் மட்டும் ‘தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நான்மதியை’ என்று சொல்லி இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். இந்தப் பாசுரத்தின் மூலம், தான் இன்னமும் தலைச்சங்க நாண்மதியத்தை தரிசிக்கவில்லை என்றும் அதனால்தான் ‘அந்த நந்நாள் எந்நாளோ’ என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால், தலைச்சங்க ‘மேல் திசையுள்’ என்று குறிப்பிட்டதிலிருந்து இந்தப் பெருமாள் கோயில் ஊரின் மேற்கு திசையில் அமைந்திருக்கிறது என்று தெரிவிக்கிறாரே, இந்தப் பதிக்கு அவர் செல்லாமலா அப்படிக் கூறுவார் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.காஞ்சிபுர திவ்ய தேசங்களைப் பாட வந்த இவர், ஒரே பாசுரத்தால் பல திவ்ய தேசங்களை

மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தவர்தானே!
நீரகத்தாய் நெடுவரை யினுச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒன்துறை நீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே
– திருநீரகம், திருவேங்கடம், நிலாத்திங்கள் துண்டம், திருஊரகம், திருவெஃகா, திருக்காரகம், திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பேர் என்று ஒன்பது திவ்ய தேசங்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டவர்தானே இவர்! அதனால் தலைச்சங்க நாண்மதியத்தை ஒற்றை வரியில் இவர் மங்களாசாசனம் செய்ததில் வியப்பு ஒன்றும் இல்லைதான்.
சரி, இப்போது நாண்மதியப் பெருமாளை தரிசிப்போம். இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. (ராஜகோபுரத் திருப்பணிக்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன) முகப்பு வளைவில் பரமபதநாதனாக பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவி யுடன் சுதை சிற்பமாக வீற்றிருக்கிறார். அவர்களுக்கு இரு புறமும் கருடனும், அனுமனும் காட்சி தருகிறார்கள்.

உள்ளே சென்றால் கருவறை முன்மண்டபத்தில் வித்தியாசமான தோற்றமாக சங்கு பெருமாளைக் காணலாம். இவரோடு, அடுத்தடுத்து ஆண்டாள் முதல் திருப்பாணாழ்வார்வரை வைணவப் பெருமக்களையும் விக்ரகங்களாக தரிசிக்கலாம். முத்தாய்ப்பாக திருமங்கையாழ்வார்.மூலவர் நாண்மதியப் பெருமாள் பேரெழிலோடு நின்றிருக்கிறார். வழக்கம்போல இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவி – பூதேவி காட்சி தருகிறார்கள் என்றாலும், இந்தப் பெருமாளின் மார்பிலும் ஸ்ரீதேவி திகழ்வது தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆமாம், மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் சாளக்கிராம மாலையில் ஒரு பெரிய டாலரில் மஹாலக்ஷ்மி திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. செங்கமலவல்லித் தாயார் தனி சந்நதியில் கொலுவிருக்கிறாள்தாயாரை தலைச்சங்க நாச்சியார் என்றும் அழைக்கிறார்கள்.

துவக்கத்தில் செங்கமல வல்லித்தாயாராக இருந்தவர், சுமார் 60 வருடங்களாகத்தான் தலைச்சங்க நாச்சியார் என்றழைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இந்த உற்சவர் தாயார், திருடு போய் மீண்டும் கிடைத்தவர் என்கிறார்கள். கோயிலின் திருக்குளமான சந்திர புஷ்கரணி, நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. இதன் பெயரிலிருந்தே இந்தத் தலம் சந்திரனால் வழிபடப்பட்டது என்பது புரிகிறது. மூலவரின் பெயரும் அதை வலியுறுத்துகிறதே – நாண்மதியன்! குளிர் நிலவு போன்ற அருள் பெருக்கும் இறைவன். விண்மதியின் தேஜஸ் ஒளிரும் வித்தகன். இது மட்டுமல்லாமல், சந்திரனின் சாபத்தைத் தீர்த்ததாலும் இவர் இப்பெயருக்கு உரியவராகிறார். தான் இழைத்த இரண்டு பாவங்களிலிருந்து சந்திரன் பெருமாளின் அனுக்ரகத்தாலேயே நிவர்த்தி பெற்றவன்.

தன் குரு பத்தினியையே (தேவகுரு பிரகஸ்பதியின் மனைவியான தாரை) தவறான கண்ணோட்டத்தில் அணுகியதும், தனது 27 மனைவியரில் ரோகிணியைத் தவிர பிற அனைவரையும் புறக்கணித்ததுமான அந்தப் பாவங்களிலிருந்து விடுபட அவன் பெருமாளை வழிபட்டான். முதலில் ஸ்ரீரங்கத்தில் ஒரு புஷ்கரணி அமைத்து அரங்கனின் அருள் பெற்று, அதன் பிறகு திரு இந்தளூருக்கு வந்து பரிமளரங்கப் பெருமாளை தவமிருந்து துதித்தான். இங்கே பரிமளரங்கநாயகித் தாயாரின் சிபாரிசால் பரிமளரங்கனின் கருணையைப் பெற்றான். (இதனாலேயே இந்த ஊர், இந்துபுரி என்று வழங்கப்பட்டது. இந்து என்றால் சந்திரன். பிறகு இந்தளூர் என்றானது). நிறைவாக தலைச்சங்கம் வந்து நாண்மதியப் பெருமாளை தியானித்துத் தன் பாவம் முற்றிலுமாக நீங்கப்பெற்றான். இப்படி சந்திரனுக்கு அருளியதால் நாண்மதியப் பெருமாளானார் இந்தத் தலத் தலைவன்.

‘தலைச்சங்கம்’ என்று இந்த ஊர்குறிப்பிடப் படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சிலப்பதிகார காலத்திலேயே மதிப்பு வாய்ந்த சங்குகள் விற்கப்படும் வியாபாரத் தலமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. வகை பிரித்து, குவியல் குவியலாகக் குவித்து பலதரப்பட்ட சங்குகள் வாணிபம் செய்யப் பட்டிருக்கின்றன. இந்த ஊரைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள் அமைந்திருந்திருக்கின்றன. இதையும் சேர்த்து ‘சங்கக் காடு’, தலை சிறந்த சங்குகள் விற்கப்பட்டதால் ‘தலைச்சங்கக் காடு’ என்றும், பிறகு மருவி தலைச்சங்காடு என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. நிலாக் கீற்றைத் தன் தலையில் சூடியதால் சிவபெருமானை ‘பிறைசூடி’ என்றழைப்பதுபோல முழு நிலவையும் சூடிய இந்தப் பெருமாள் ‘நாண்மதியன்’ என்று வழங்கப்பட்டார். இப்படி சந்திரன் உருவாக்கிய இந்த புஷ்கரணியில் குறிப்பாக புதன், சனிக்கிழமைகளில் நீராடி பெருமாளை தரிசித்தால் சரும நோய்கள் மறையும் என்றும், முக்கியமாக சர்க்கரை நோய் காரணமாகப் புரையோடிப் போயிருக்கும் புண் ஆறும் அல்லது சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபட உரிய மருத்துவத்துக்கு வழி தெரியும் என்றும் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்
வ்யோமஜ் யோதிரி தீரித: சசிஸரஸ் தீரேருணாப் ஜாதவ:
பூர்வாம்போதி முகஸ் தலாருணவ நாக்யாதே
புரேகேசரே
சாந்த்ரே சந்த்ரநிபே விமுக்த பவிநாம் ப்ருந்தைஸ் ஸுரைஸ் ஸேவித:
நித்யை ராச்ரித பாதபத்ம யுகளஸ் ஸாக்ஷாத்க்ருதோ பாஸதே

எப்படிப் போவது: மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் சென்று, சீர்காழி பாதையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது தலைச்சங்காடு. பேருந்து, ஆட்டோ மூலமாகச் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் மாலை 6 மணிவரை
முகவரி: அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம் – 609301.

 

The post தலைச்சங்க நாண்மதியம் நாண்மதியப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: