மூன்றுவிதமான தாய்மார்கள்

பொதுவாகவே எந்தத் தாயும் தன் வயிற்றில் பிறந்த பிள்ளையை விட்டுத் தரமாட்டாள். தன் பிள்ளைகளுக்குக் கிடைத்தது மற்ற பிள்ளைகளுக்குக் கிடைக்கக் கூடாது என்று மோசமான தாய் நினைப்பாள். தன் பிள்ளைகளுக்கு கிடைத்தது மற்ற பிள்ளைகளுக்கும் கிடைக்கட்டுமே என்று சாதாரணமான தாய் நினைப்பாள். தன் பிள்ளைக்கு கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை, மற்ற பிள்ளைகளுக்கு கிடைத்தது சந்தோசம் என்று உத்தமத்தாய் நினைப்பாள்.

இதில் கைகேயி ராமனுக்கு மகுடம் கிடைக்கக்கூடாது, பரதனுக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் ராமனைப் பெற்ற கோசலை அப்படி நினைக்கவில்லை.கைகேயி, ‘‘நீ காட்டுக்குப் போக வேண்டும் இது அரசன் ஆணை’’ என்று சொன்னவுடன், எந்தச் சலனமும் இல்லாமல், ‘‘நல்லது இப்பொழுதே நான் விடை கொள்கிறேன்’’ என்று சொல்லி, கைகேயியின் திருவடியையும், தசரதன் இருந்த திசையையும் நோக்கித் தொழுது, நேராக கோசலையின் திருமாளிகைக்கு வருகின்றான்.

ராமனைப் பார்த்ததும் கோசலைக்கு அதிர்ச்சி. அரச மரியாதைகள் போன்றவற்றோடு அவன் வரவில்லை மிக எளிமையாக, எந்த ஒரு அரசு மரியாதையுடனும் ராமன் வரவில்லை. இதை ஊகித்த கோசலை ‘‘என்ன ஆயிற்று இவனுக்கு? இவனுக்கு அபிஷேகம் நடக்கவில்லை போலிருக்கிறது. காரணம் இவன் தலை அபிஷேக நீரினால்நனையவில்லையே!’’ இத்தனைச் சந்தேகமும் படபடவென்று வருகின்றது. பெற்ற தாய் அல்லவா. எத்தனை எதிர்பார்ப்பு இருந்திருக்கும்? இப்பொழுது நேரடியாகவே கேட்டு விடுகிறாள்.“என்ன ராமா! நீ முடி சூட்டிக் கொண்டு வருவாய் என்று நினைத்திருந்தேன், உடனடியாகத் திரும்பிவிட்டாய்.

என்ன நடந்தது? நீ முடி சூட்டிக் கொள்வதில் என்ன தடை?’’. அதற்கு ராமன், கைகேயியின் வரத்தால் எனக்கு வாய்ப்பு போயிற்று என்று சொல்ல வேண்டும். ஆனால், ராமன் எப்பொழுதும் நேர்மறைச் சொற்களைப் பேசியே வழக்கம். கம்பன் எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து வார்த்தைகளைப் போடுகிறான் என்பதைக் கவனித்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது. கோசலைக்குத் தன் மகனுக்கு மகுடம் கிடைக்கவில்லையே என்பது தானே கேள்வி. இதற்கு ராமன் பதில் சொல்கிறான்.‘‘அம்மா உன் மகனுக்குத்தான் மகுடம் கிடைத்தது’’ என்கிறான். பாடல் அற்புதமான பாடல். “நின் காதல் திருமகன், பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்.’’

என்ன அற்புதமான வரி பாருங்கள். இந்தப் பாடல்களை வாசிக்கின்ற பொழுது, வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது? ஏமாற்றங்களை எப்படி நேர்மறையாகச் சொல்வது? என்று எத்தனை விஷயங்களைக் கொட்டுகின்றான் கம்பன் பாருங்கள்.‘‘கைகேயியின் மகன் பரதனுக்கு மகுடம் என்று சொல்லவில்லை.பொதுவாகத் தனக்குக் கிடைக்காதது வேறொருவருக்கும் கிடைக்கிறது என்று சொன்னாலே, தனக்கும் அவனுக்கும் உள்ள உறவைச் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். இது உலக வழக்கு. ஆனால், இந்த இடத்திலே ராமன் ‘‘உன் அன்புக்குரிய மகன், என் அன்புக்குரிய தம்பி, குணத்தின் தரத்தில் குறையாத பரதன் முடி சூடுகின்றான். அம்மா, நீ ஏன் வருத்தப்படுகிறாய்? நீ மகிழ்வதற்கு எத்தனைக் காரணங்கள் இருக்கின்றன தெரியுமா? என்று வரிசைப்படுத்துவது இந்தப் பாடலின் சிறப்பு.

1. உன் மகன் ராமனுக்கு மகுடம் இல்லை என்று வருத்தப்படாதே, பரதனும் உன் மகன்தான், அதுவும் உன்
அன்புக்குரிய மகன்.
2. அவன் என்னுடைய தம்பி.
3. குணத்தில் தங்கம்.
‘‘இத்தனைப் பெருமையும் உள்ள ஒருவனுக்கு மகுடம் கிடைக்கிறதே என்று அல்லவா நீ சந்தோஷப்பட வேண்டும்’’ என்று தாயினுடைய துக்கத்தைத் தன்னுடைய அற்புதமான வார்த்தைகளாலே போக்க முயற்சிக்கின்றான் ராமன். ஆனால், கோசலை ராமனையே பெற்ற தாய் அல்லவா, ராமனுக்கே இத்தனை குணங்கள் இருந்தால், ராமனைப் பெற்ற தாய்க்கு எத்தனை குணங்கள் இருக்கும்? அதனால் அவள் ராமன் சொன்னதைக் கேட்டதும் பதில் கூறுகிறாள்.
‘‘ராமா, நீ சொல்வது சரிதான். ஆனால், ஒரே ஒரு விஷயம்தான் கொஞ்சம் மாறுபாடாக இருக்கிறது. மூத்தவன் முடிசூட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒரு (அரச) மரபு இருக்கிறது. அந்த மரபுக்கு மாறாக இருக்கிறது என்பதைத் தவிர, பரதன் உன்னைவிட மூன்று மடங்கு நல்லவன்.’’ என்ன அற்புதமான வார்த்தை பாருங்கள். ராமனுக்கு மகுடம் கிடைக்கவில்லையே என்பது கோசலையின் வருத்தம் இல்லை. அரசுமுறை மாறிவிட்டதே என்பது மட்டுமே ஒரு சிறு குறையாகத் தெரிகிறது. அந்தச் சிறு குறைகூட, பரதனுக்கு மகுடம் என்று சொன்னவுடன் மறைந்து போய் மகிழ்ச்சி தோன்றுகிறது. தன்னுடைய மகனிடமே சொல்கின்றாள்,
‘‘நல்லது நல்லது பரதனுக்குக் கிடைத்தது நல்லது. காரணம் நீ நல்லவன். உன்னைவிட மூன்று மடங்கு நல்லவன் பரதன்.’’
“முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையில்
நிறை குணத்தவன் நின்னிலும் நல்லனால்
குறைவு இலன் எனக் கூறினாள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்’’
அதற்கடுத்து தன்னுடைய மகனுக்கு அறிவுரை கூறுகின்றாள்.

‘‘நீ தந்தையின் கட்டளை மீறாதது சரியான செயல். அதுதான் அறம். இப்பொழுது தம்பி பரதனுக்கு மகுடம் கிடைத்து விட்டதாகச் சொல்கின்றாய். நல்லது. அவனே ஆளட்டும். நீ அவனுக்கு ஒத்துழைக்க வேண்டும். அவனோடு ஒன்றுபட்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.’’ இதே வார்த்தைகளை கைகேயி சொல்லி இருந்தால் எத்தனை அழகாக இருந்திருக்கும்?‘‘ராமா, உனக்கு மகுடம் கிடைத்தது முறை. மற்ற சகோதரர்களோடு சேர்ந்து கொண்டு நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்’’ என்று நினைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.தனக்கு மகுடம் கிடைக்காததை கோசலை ஏற்றுக்கொள்ளும் படியாகச் சொல்லி, தயார்படுத்திய ராமன், அடுத்து சொன்ன வார்த்தைதான் கோசலையால் தாங்க முடியவில்லை.‘‘அம்மா, இன்னொரு சின்ன வேலையை, எனக்கு தசரதன் நியமித்திருக்கிறார். அதுவும் என்னுடைய நன்மைக்காக, (எனை நல்நெறி உய்ப்பதற்கு ஏயது உண்டுவோர் பணி) என்று ராமன் சொல்லியவுடன் கோசலைக்குக் கலக்கம் ஏற்படுகிறது. இதுவரை அவளுடைய மனதிலே எந்தக் கலக்கமும் இல்லை. இப்பொழுது ராமன் ஏதோ புதிர் போடுகிறானே என்று மனதில் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. சற்று பதற்றம் அடைகிறாள்.‘‘அப்படியா, அரசன் அப்படி என்ன பணி உனக்கு இட்டிருக்கிறார்?’’ ராமன் சொல்லிய பதில் அவளைச் சுய நினைவு இழக்கச் செய்து, பூமியில் தள்ளிப் புலம்ப வைக்கிறது.

The post மூன்றுவிதமான தாய்மார்கள் appeared first on Dinakaran.

Related Stories: