ஜோதிட ரகசியங்கள்

வாழ்வதற்கு வழி சொல்ல ஜோதிடம்

இன்றைக்கு ஏதோ காரணத்தினால் பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெறுவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதற்கு கிரக தோஷங்கள் காரணமா என்ற கேள்வி வருகிறது. பெரும்பாலான ஜோதிடர்கள் கிரக தோஷம் தான் காரணம் என்பதையே பதிலாகச் சொல்வார்கள். கிரகங்களின் இயக்கங்கள் கால தேச வர்த்தமானத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. ஒரு காலத்தில் புதன் என்றால் தாய்வழிச் சொந்தங்களைக் குறிக்கும். புத்தி மற்றும் கல்விக்குரிய கிரகம் என்பதோடு விட்டு விட்டோம்.

ஆனால் இன்று அதனுடைய காரகங்களை நடைமுறை விஷயங்களோடு இணைத்து தகவல் தொழில்நுட்பத்துறை, செயற்கை தொழில்நுட்பம் போன்ற பல விஷயங்களை ஊகித்துச் சொல்லுகிறோம். எப்பொழுது பழைய நூல்களில் இல்லாத விஷயத்தை ஊகித்துச் சொல்லுகிறோமோ, அப்பொழுது அந்த ஊகம் சரியாக இல்லாமல் இருப்பதற்கும் வழி இருக்கிறது. கிரகங்களின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது நடைமுறையில் ஒருவனை எப்படி ஆட்டிப் படைக்கிறது? எங்கே ஆட்டிப்படைக்கிறது? என்பதை விசாரித்து அதற்குப் பிறகு அனுமானித்துத் தான் பலன்களை ஓரளவு சொல்ல முடியும்.

துல்லியமான பலன்கள் சொல்வதில் பல சிரமங்கள் இருக்கின்றன. காரணம், கிரகங்கள் ஒரு விஷயத்தை நேர்மறையாகவோ எதிர் மறையாகவோ நடத்தத் தூண்டுகிறதே தவிர அதுவே நேரடியாக நடத்துவதில்லை. திருமண விஷயத்திற்கு வருவோம். அதே 12 கட்டங்கள். அதே 9 கிரகங்கள். இதற்குள் தான் ஏதோ ஒரு இடத்தில் சனி அமர்ந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் ராகுவும் கேதுவும் அமர்ந்திருக்க வேண்டும். லக்னங்கள் 12 தான். எவ்வளவுதான் நுட்பமாக நீங்கள் பிரித்துப் பிரித்துப் பார்த்தாலும் ஒரு கட்டுக்குள் தான் அமையும். ஒரு தாமரை மலரின் ஒரு இதழில் ஒரு கூர்மையான ஊசி நுழையும் நேரம் வரை கணக்கிட வேண்டும்.

அதாவது நேனோ செகண்ட் அளவில் கணக்கிட வேண்டும். இது நடைமுறை சாத்தியம் இல்லை. எனவே ஓரளவு ஸ்தூலமாக ராசி மற்றும் அம்சக்கட்டத்தில் அமைந்த கிரக அமைப்புகளை, (நிலைகளை) வைத்துக் கொண்டு நடைமுறையை உத்தேசித்துத்தான் பலன் கூற முடியும். (அம்சம் என்பது பலன் சொல்வதற்கல்ல, கிரக சாரத்தையும், வர்க்கோத்தமம் போன்ற கிரக பலத்தையும் அறிவதற்குத் தான்).ஒரு ஜோதிடர் பலனைச் சொன்னால் அது அந்த ஜாதகருக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். அவருடைய வாழ்வை முன்னேற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.

அவருக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நண்பர் என்னிடத்திலே கேட்டார். ‘‘நீங்கள் வருகின்றவரிடம் பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டு பிறகு பலன் சொல்ல ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் (ஒரு ஜோதிடரின் பெயரைச் சொல்லி) அவர் ஜாதகம் கொடுத்த உடனே டக்கு டக்கு என்று எல்லாவற்றையும் சொல்லிவிடுவார். அதுதானே ஒரு ஜோதிடருக்கு அழகு’’ என்றார்.நான் சொன்னேன்.‘‘ஐயா நான் நான் ஜாதகருக்கு பலன் சொல்வதில் விருப்பம் உடையவன். ஜாதகத்துக்கு அல்ல’’.அவருக்குப் புரியவில்லை. அவர் திரும்பக் கேட்டார்.

‘‘அது வேறு, இது வேறா?’’ என்றார்.சில நேரங்களில் இரண்டும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் அது வேறு இது வேறாகத் தான் இருக்கிறது. அதுவும் இதுவும் ஒன்றா என்பதைத் தெரிந்து கொள்ளாமல், பலன் சொல்வதில் என்ன பிரயோஜனம் இருக்க முடியும்? அது எப்படி ஜாதகருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் அல்லது ஆறுதலாக அமையும்?
CAUSE AND EFFECT என்று ஒரு விஷயம் தான் PREDICTION என்று சொல்லுகின்றோம் அதாவது ஒரு காரணம் (CAUSE) அதனால் காரியம் (EFFECT). இந்தக் கிரகம் இப்படி இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்பது PREDICTION.

விஷயம் ஏன் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டு, அப்படி நடப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்வது இது Effect to cause என்கிறோம்.முதல் விஷயத்தில் நடந்தாலும் நடக்கலாம். இரண்டாவது விஷயத்தில் நடந்த பிறகு ஆராய்வது. பெரும்பாலும், இரண்டாவது விஷயத்தின் அடிப்படையில்தான் முதல் விஷயம் குறித்த பல விதிகள் (Rules of prediction) நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த விதிகள் ஒவ்வொரு நாளும் புது விதமாக உருவெடுத்துக் கொண்டே இருப்பதால்தான் ஜோதிட சாஸ்திரம் என்பது அனுபவத்தில் வளர்கின்ற சாஸ்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கான பலன்கள் அவர் தரும் ஜாதகத்தில் ஒத்துவரவில்லை என்று சொன்னால் அவரிடத்தில் பிழையில்லை, அவர் கொண்டு வந்த ஜாதகத்தில் பிழை என்பதைத் தெரிந்து கொண்டு, ஜாதகத்தை சரி செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தான் பலன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இதில் கூட அனுபவத்தில் நான் ஒரு புது விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். ஒரு கிரகம் எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி நடப்பதாகத் தெரியவில்லை. அதையும் கொஞ்சம் கூர்மையாக கவனித்துத்தான் பலன் கூற வேண்டி இருக்கிறது.சரி. நான் ஏற்கனவே சொன்னது போல, கிரகங்களுடைய செயல்பாடு மனதோடு சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும் இருக்கிறது.

அதனால் கிரக தோஷங்கள் என்பதை பெரும்பாலும் மனத்தடை (obstruction of mind) என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் மனதின் ஆற்றல் தான் ஒரு காரியத்தைச் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ, சரியாகச் செய்யவோ, தவறாகச் செய்யவோ தூண்டுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் ‘‘கோள்களின் கோலாட்டங்கள்’’ எப்படி எல்லாம் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த அடிப்படையிலே இன்றைய திருமணத் தாமதங்களை அலசினால் புதுவிதமான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.அதற்கு முன்னால் இன்னொரு விஷயத்தையும் சொல்லிக் கொள்கின்றேன்.

கிரகத் தடைகள், கிரக தோஷங்கள் ஒவ்வொரு ஜாதகத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கும். இவைகளை வெல்வதுதான் வாழ்க்கை. பாதக திசை நடக்கிறது, திருமணம் செய்வதில் சிக்கல்தான் என்றெல்லாம் சொல்லும் பொழுது, அந்த ஜாதகர் என்ன செய்வார்?. 22 வயதிலேயே பாதகத்திசை ஆரம்பித்து விட்டது. 41 வயது வரைக்கும் செல்கிறது என்றால் எப்பொழுது அவர் திருமணம் செய்து கொள்வது?. இதில் சனி 3 இடங்களைத்தவிர (3,6,11) மற்ற இடங்களில் ஒவ்வொரு தோஷம் செய்யும் என்கிறது சாஸ்திரம். சனியினுடைய ஒரு சுற்றில் தோஷ காலம் 22½ வருடங்கள் போய்விடும். ஒருவனுடைய சராசரி ஆயுள் 60, 65 என்று வைத்துக் கொண்டால், இப்படி சனி கொஞ்சம், ராகு கொஞ்சம், குரு கொஞ்சம் எடுத்துக் கொண்டால் அவன் எப்படித்தான் வாழ்வது? வாழ்வதற்கு வழி சொல்ல வேண்டும் அல்லவா! அதற்குத்தான் ஜோதிடம்.

பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: