அகந்தைக் கொண்ட மூவர் யார்?
கண்ணனின் மனைவி சத்தியபாமா, பேரழகி. அதிகப்படியாக அலட்டிக் கொள்ளும் சுபாவம் உடையவள். இவள் செயல்கள் வேடிக்கையாக இருக்கும். இவ்வேடிக்கையைக் கண்டு கண்ணன் ரசிப்பார். இதனால் சத்தியபாமா உள்ளத்தில் கண்ணபிரான் தன் மீது அதிக அன்பு வைத்து உள்ளார், என்ற எண்ணம் மேலோங்கியது. பாரிஜாத மரத்தடியில், ஊஞ்சலில் ஸ்ரீ கிருஷ்ணரும், சத்யபாமாவும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். சத்தியபாமா, கிருஷ்ணரை பார்த்து பேசிக் கொண்டிருந்தத் தருணத்தில், பேச்சோடு பேச்சாக, “பிராணநாதா! ராமா அவதாரத்தில் நீங்கள் சீதாதேவிக்காக காடு மேடெல்லாம் அலைந்துதிரிந்தீர்களே! அவள் என்னைவிட பேரழகியா? என்று கர்வமாகக் கேட்டாள்.
அவள் மனதில், தன்னைத் தவிர பேரழகி ஒருவரும் இல்லை என்ற செருக்கை அறிந்தார் கண்ணன். லேசாக இதழ் விரித்து புன்னகைப் புரிந்தார். ஆனால், பதில் ஒன்றும் உரைக்கவில்லை. தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார். திருமாலின் வாகனம் கருடன் அதே போல், கருடனுக்கும் “தான்’’ என்ற தலைக்கனம் அதிகமாக இருந்தது. காரணம், இந்திரனை தன் உதவியால் போரில் பகவான் வென்றார் என்ற தற்பெருமை. அவர் உள்ளத்தில் ஆட்டிப் படைத்தது. அதனால் அகம்பாவம் கொண்டார். இதையும் கண்ணன் அறிந்து அமைதியாக இருந்தார்.
சுதர்சன சக்கரத்தின் பெருமை
சுதர்சன சக்கரத்திற்கு மனதில் மமதை ஏற்பட்டது. தன்னால்தான் இந்திரனின் வஜ்ராயுதத்தை மழுங்கடிக்க முடிந்தது என்ற அகங்காரம் உள்ளத்தில் குடிகொண்டு இருந்தது. ஸ்ரீ கண்ணபிரானும் அவன் உள்ளத்தில் நினைத்ததை அறிந்தே இருந்தார். ஆக சத்தியபாமா, கருடன், ஸ்ரீ சுதர்சன சக்கரம் ஆகியோருக்கு தக்க பாடம் புகட்டி, பக்தியைப் புரிய வைக்க வேண்டும். பக்தர் களிடம் உள்ள குற்றம் குறைகளைப் போக்க எண்ணினார், பகவான் கண்ணன். அதற்கான தன் கிருஷ்ணலீலைகளை தொடங்கினார். அதற்குரிய சரியான நேரம்
கூடி வந்தது.
பக்தியில் சிறந்தவர்கள் யார்?
பக்தர்கள் பலவிதம் உண்டு. அதில் அனுமனின் பக்தி எடுத்துக்கூற முடியாத அளவிற்கு உயர்ந்தது. விரிந்த ஆகாயம் ஆழ்கடலும் உவமையாகக் கூறினாலும் போதாது அல்லவா?
ராம அவதாரம் முடிந்தது. ராமபிரான் வைகுண்டம் வருமாறு அனுமனை அழைத்தார். நான் வரமாட்டேன் பிரபு. பூவுலகில், நாம சங்கீர்த்தனம் செய்து, உன் நாமத்தைச் சொல்லக் கேட்டு, பூமியிலே வாழ்வேன் என்று உரைத்தான். சத்சங்கம் நடைபெற்ற இடத்தில் அமர்ந்து, ராமபிரானின் லீலை களைக் கேட்டும், பாடியும், மெய்மறந்து சந்தோசத்தின் எல்லையை அனுபவித்தார். துவாபரயுகம் தொடங்கியது. கிருஷ்ணா அவதாரம் நடைபெற்றது. அனுமன் உள்ளத்தில், ஸ்ரீ ராமர் உருவமே நிறைந்திருந்தது.
ஆதலால், ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு, மனம் மகிழ்ந்து மெய்மறந்து இருந்தார். அப்படியே ஒவ்வொரு இடங்களாக திரிந்து துவாரகைக்கு வந்து சேர்ந்தார், அனுமான். அங்கே ஒரு மரக் கிளையில் அமர்ந்து, ராம நாமம் ஜெபித்து பேரின்பம் பெற்றார்.
அனுமான், துவாரகைக்கு வந்த செய்தியை ஸ்ரீ கிருஷ்ணர் அறிந்தார். அனுமனின் பெருமையை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினார். ராமனும் கிருஷ்ணனும் ஒருவரே அல்லவா! இதை அனுமான் சற்று புரிந்துக் கொள்ளவில்லை. ராமராக இருந்த பொழுது, அனுமான் பக்தியோடு ராமனுடன் எப்படியெல்லாம் இணைந்திருந்தார். அந்த பக்தி பரவசம் ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளத்தில் நினைவுக்கு வந்தது. அவரை பார்க்க வேண்டும் போல தோன்றியது.
அக்கணமே தன் சேவகன் கருடனை அழைத்தார். “மகாபிரபு என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்’’ என்று கேட்டார், கருடன். துவாரகை அருகே உள்ள தோட்டத்தில் ஒரு குரங்கு வந்து இருக்கிறது. அதை பிடித்து வரவேண்டும் என்று கருடனுக்கு கட்டளை இட்டார். கருடன் சலிப்படைந்தார். ஒரு குரங்கை நான் பிடித்து வரவேண்டுமா? என்று முகம் சுளித்தார், கருடன். உடனே ஸ்ரீ கிருஷ்ணர், “உன்னால் பிடிக்க முடியவில்லை என்றால், ஒரு சேனையை உடன் அழைத்து போ’’ என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினார். அதைக் கேட்டதும், கருடன் வியப்பு அடைந்தான். “என்ன ஒரு சாதாரண குரங்கை பிடிக்க நான் செல்வதே அவமானம், இதில் ஒரு படையை வேறு திரட்டி செல்ல வேண்டுமா? இது அதிகப்படியாக தெரியவில்லையா கண்ணா?’’ எனக் கண்ணனை நோக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக புறப்பட்டார்.
தோட்டத்தில் அனுமான்
தோட்டத்து மரக்கிளையில் அமர்ந்திருந்த அனுமான், “ராம்… ராம்.. ராம்..’’ என ராம கீர்த்தனை செய்து, அங்கிருந்த பழங்களைப் பறித்து பசி ஆறிக் கொண்டு இருந்தார். அவ்விடத்திற்கு வந்த கருடன், “ஏ! குரங்கே, என்னோடு வா.. எங்கள் துவாரகை மன்னர் ஸ்ரீ கிருஷ்ணர் உன்னை அழைக்கிறார், வா…’’ என்று குரல் கொடுத்தார், கருடன்.
ஆனால், அனுமான் ராம நாமத்தில் திளைத்து இருந்தார். கருடன் அழைத்தது செவியில்விழவில்லை. தான் பலமுறை அதட்டி, மிரட்டி அழைத்தும் வராததால், அனுமனின் வாலை பிடித்து இழுத்தார், கருடன். உடனே அனுமான், தன் வாலோடு கருடனை சுருட்டி லேசாக இறுக்கினார். கருடனுக்கு மூச்சு முட்டியது. “என்னவிந்தை? இப்படி அழுத்துகிறானேகுரங்கா? அல்லது குரங்கு வடிவில் உள்ளராட்சசனா? யாராக இருப்பான்?’’ என மனதுக்குள் கணக்கை போடுகிறார்.
வந்திருப்பவன், ராம பக்தரான அனுமான் என அறிந்தார், கருடன். அதே சமயம், அனுமான் சட்டென கருடன் உடலை தூக்கி கடலில் வீசினார். ஆழ்கடலில் மூழ்கிய கருடன், கிருஷ்ணர் நாமம் சொல்லி மேலே வந்தார். தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அரண்மனையை அடைந்தார். “கிருஷ்ணா பிரபு, அது குரங்கு அல்ல, எத்தனை முறை முயன்றாலும், பிடிக்கவே முடியவில்லை’’ என மூச்சு முட்ட நடந்த செயல்களைக் கூறினார்.
கலகல என்று சிரித்தார், கிருஷ்ணபரமாத்மா. “கருடா, இப்பொழுது நீ மீண்டும் சென்று, அனுமனே, உன் இஷ்டதெய்வமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அழைக்கிறார், வா…’’ என்று பணிவோடு சொல்லிப் பார் எனக் கூறினார். கருடன் தயக்கத்துடன், “அனுமன் வர மறுத்தால் நான் என்ன செய்ய கண்ணா?’’ என்ற கேள்வியைக் தொடுத்தார். “இம்முறை உனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் உன்னுடன் அனுமான் வருவார், கவலைப்படாமல் செல்.’’ என தைரியத்தைக் கொடுத்து அனுப்பினார், கிருஷ்ணர்.
கருடன் அப்படி சென்ற அக்கணமே, தன் பட்டமகிஷியான சத்யபாமாவை பார்த்து, “சத்தியபாமா, அனுமான் வருகின்றார். நீ சென்று சீதா உருவம் போல உருமாறி வா’’ என்று அனுப்பிவிட்டு, சுதர்சன சக்கரத்தையும் அழைத்தார். சுதர்சன சக்கிரமும் வந்தது. “அரண்மனைக்குள் ஒருவரும் வராமல், நுழைவு வாயிலில் காவல் காக்க வேண்டும். எச்சரிக்கைத் தேவை’’ எனக் கூறி அவரை அனுப்பி வைக்கிறார். பின்பு, தானும் ராமரைப் போன்று வில், அம்பு தோற்றத்துடன் உருமாறி அமர்ந்தார்.
காற்றாக பறந்த கருடன், அனுமானிடம் சென்றார். “வாயுபுத்திரரே.. ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி தங்களை அழைத்து வர கூறி இருக்கிறார், வாருங்கள்’’ என்று அழைத்தார். “என்ன! என்னுடைய மகாபிரபு, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி என்னை அழைத்தாரா?!. இந்த பூலோகத்திற்கு மீண்டும் வந்துவிட்டாரா?’’ என் கருணா மூர்த்தி ராமச்சந்திர பிரபு, என்னை அழைத்தாரா!’’ என ஆனந்தக் கண்ணீர் மல்க கருடன் பக்கம் திரும்பி, “இதோ.. வருகிறேன் இதோ… வருகிறேன்’’ என்றுகூறி பரவசம் அடைந்தார், அனுமார்.
இதை கண்டதும், கருடன் விரைவாக செல்ல வேண்டும் என் முதுகில் ஏறி கொள்ளுங்கள் என்றார். நீங்கள் செல்லுங்கள் நான் பின்னாலே வருகின்றேன் என்று சொன்னதும், இன்னும் எத்தனை காலமாகும் நீங்கள் வந்து சேருவதற்கு என்று புலம்பிக் கொண்டே வாயுவேகத்தில் என்னால் தங்களைத் தூக்கிச் செல்ல முடியும் வாருங்கள் என்று மீண்டும் அழைத்தார்.
வர மறுத்தார், அனுமான். சரி என்று கருடன் வானில் பறந்தார். கருடனுக்கு முன்பாகவே அனுமான், அதிவேகமாக துவாரகையை அடைந்தார். அவருக்கு அயோத்தியாகதான் அந்த இடங்கள் தெரிந்தது. நுழைவு வாயிலில் காவல் காத்த ஸ்ரீ சக்கரம், அனுமானை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தார். “நான் பகவானை தரிசிக்க வேண்டும் செல்லும் பொழுது நீ இடையூறாக ஏதும் செய்யாதே’’ எனக் கூறினார், வாயுகுமாரன்.
“இது, மன்னர் கட்டளை அனுமதி இல்லை’’ என மறுத்தார் ஸ்ரீ சக்கரம். பொறுமையைக் கடந்த அனுமான், ஸ்ரீ சக்கரத்தை அடக்கினார். பகவானின் அரண்மனைக்குச் சென்று சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவை கண்டார். “ஸ்ரீ ராமபிரபு.. ஸ்ரீ ராமபிரபு.. சீதா ராமா…’’ என்று பலவாறு அழைத்து கண்ணீர் மல்கி பகவானின் பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். பின்பு நிமிர்ந்து பார்த்தவர், ராமபிரான் அருகே அமர்ந்திருக்கும் பெண்ணைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
“ஸ்ரீ ராமபிரபு, சீதா மாதா எங்கே? அவரிடத்திலே வேறு யாரோ அமர்ந்திருக்கிறார்களே? பகட்டாக அலங்கரித்திருக்கும் இவர் யார்? தாசிக்கு, தாங்கள் இவ்வளவு இடம் கொடுத்து வைத்திருக்கிறீர்களே’’? எனக் கேட்டார். தாசி என்ற ஒரு வார்த்தை கேட்டதும், துடிதுடித்து வெட்கப்பட்டு தலைகுனிந்தார், சத்திய பாமா. அவள் சௌந்தர்ய அழகு மீது கொண்ட கர்வம் ஒழிந்தது. “ஆஹா சீதாமாதா, எத்தனை அழகான பதம். எளிமையாக அன்பே உருவமாக எளிமையான இயற்கை பேரழகியாக திகழ்ந்தவர் என்பதை அறிந்தாள், சத்திய பாமா. அனுமார், எளிதாக விளக்கிவிட்டார்.
“அனுமனே! உன்னை யாருமே தடுக்கவில்லையா? எப்படி உள்ளே வந்தாய்?’’ என்று பகவான் கேட்டார். அஞ்சனையின் மைந்தன், தன் வாலில் இருந்த ஸ்ரீ சக்கரத்தை வெளிப்படுத்தினார். எதிரே நின்ற ஸ்ரீ சக்கரம் பொலி இழந்து போய்விட்டது. அதே சமயம், மூச்சு இரைக்க இரைக்க பறந்து வந்த கருடன், “ஸ்ரீ கிருஷ்ணா, நான் வேகமாக வந்து விட்டேன். பின்னால் அனுமான் வருவார்’’ எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, “ஸ்ரீ ராம்.. ஸ்ரீ ராம்..’’ என நாமம் உச்சரிக்கும் சப்தம் கேட்டு திரும்பினார். வாயுபுத்திரன் அனுமான் நிற்பதை கண்டதும், வெட்கி தலை குனிந்தார், கருடன். ஸ்ரீ கிருஷ்ணர் அனுமானுக்காக, ஸ்ரீ ராமர் உருவம் தாங்கி பக்திக்கு மெச்சி அருள் பாலித்தார்.
“தான்’’ என்ற அகங்காரம் அந்தமூவரிடத்திலும் அழிந்தது. இவ்வாறு கண்ணன் ஆடிய நாடகம் அனுமானை வைத்து பக்தியின் மேன்மையை உணர்த்தி, மூவரின் அகந்தையை அழித்தார். அதன் பின்பு, அனுமானை பார்த்து துவாரகாவில் கீழ் வாயிலில் நகர காவலுக்காக நீ இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், கிருஷ்ணர். அங்கே அமர்ந்து கொண்டு ராம நாமத்தை உச்சரித்தார், அனுமான்.
எனவே, “தான்’’ என்ற அகந்தை மனிதருடைய உள்ளத்தில் குடிகொண்டால், அவர்களுடைய வாழ்வில் நிம்மதி அழிந்துவிடும். எப்பொழுதும், பரந்த மனப்பான்மையும், விட்டுக் கொடுக்கும் எண்ணத்துடன் வாழ்ந்தால், தன்னை மீறிய ஒரு சக்தி நம் அருகே வரும். அதுதான் தெய்வ சக்தி, அறிந்துக் கொண்டால், வாழ்வு இன்பமயமாய் அமையும்.
பொன் முகரியன்
The post துவாரகையில் அனுமான்! appeared first on Dinakaran.