?இசைத்துறையில் சிறந்து விளங்க எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

பொன்விழி, அன்னூர்.
சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். கலைத்துறையில் முதன்மையான இடத்தினைப் பிடிப்பது இசை. அந்தத் துறையில் சிறந்து விளங்க கலைவாணியாம் சரஸ்வதியை வணங்க வேண்டும். அன்னையின் கரங்களிலேயே வீணை இருப்பதுதான் இதற்கு ஆதாரம். நாதமும் வேதமும் சரஸ்வதி தேவியின் இரண்டு கண்கள் என்று சொல்வார்கள். காற்றிலே கலந்திருக்கும் அந்த நாதத்தை செவிக்குள் கொண்டுவந்து சேர்ப்பதுதான் இசை. சாமவேதம் என்பதுதான் இசையின் அடிப்படை. ஆக சரஸ்வதிதேவியின் அருட்பார்வை கிடைத்தால்தான் இசைத்துறையில் பரிமளிக்க முடியும்.

?இரவில் ராகுகாலம் எமகண்டம் இல்லாதது ஏன்?

– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
எமகண்டம் என்பது இரவிலும் உண்டு. அதனை ஒரு சில பஞ்சாங்கங்களில் தெளிவாகவே கொடுத்திருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00-7.30, திங்கள் அதிகாலை 3.00-4.30, செவ்வாய் இரவு 1.30-3.00, புதன் இரவு 12.00-1.30, வியாழன் இரவு 10.30-12.00, வெள்ளி இரவு 9.00-10.30, சனிக்கிழமை அன்று இரவு 7.30-9.00 என்பது இரவு நேரத்தில் எமகண்டத்தின் கால அளவுகள் ஆகும். இதே போன்று குளிகை நேரமும் இரவில் இடம்பிடிக்கும். ராகுகாலம் இரவு நேரத்தில் வருகிறதா இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அசுப காலம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்ற ஒரு கருத்து இருப்பதால் இரவு நேரத்தில் வரும் இந்த கால அளவுகளை நடைமுறையில் பெரும்பாலும் யாரும் பின்பற்றுவதில்லை.

?வீடுகளில் நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாமா? இதனால் தடைகள் மற்றும் தோஷங்கள் ஏதேனும் ஏற்படுமா?

– ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை.
வளர்ப்புப் பிராணிகள் என்றுதானே அவற்றிற்கு பெயர். அதனால் நாய்களை வளர்ப்பதால் தோஷம் என்பது உண்டாகாது. ஆனால் அவற்றை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. வீட்டிற்கு வெளியேதான் அவை இருக்க வேண்டும். தெய்வாம்சம் பொருந்திய பசுவைக் கூட வீட்டுத்தோட்டத்தில் கொட்டகையில்தானே கட்டி வைக்கிறோம். கிரகபிரவேசம் மற்றும் கோபூஜை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பசுவை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதில்லையே. நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளை வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்கலாம். நம்வீட்டு சமையல் அறை, படுக்கை அறை உட்பட வீட்டு வாயிற்படியைத் தாண்டி இந்த வளர்ப்பு பிராணிகளை வீட்டிற்குள் அனுமதிப்பது என்பது சாஸ்திர விரோதம்தான். இதனால் தோஷம் என்பது உண்டாகும் என்று நம்முடைய சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது.

?பெண்களில் சிலர் உறங்கும்போது தாலிசரட்டை கழற்றி வைத்து விடுகிறார்களே, இது சரியா?

– என். இளங்கோவன், மயிலாடுதுறை.
சரியில்லை. முற்றிலும் தவறு. ‘மாங்கல்யம் தந்துநானேன’ என்ற ஒரு உறுதிமொழியைச் சொல்லி அதாவது நீயும் நானும் இணைபிரியாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காக திருமாங்கல்யத்துடன் கூடிய இந்த மங்கல சரட்டினை உன் கழுத்தில் கட்டுகிறேன் என்ற உறுதிமொழியுடன் அணிவிக்கப்பட்ட தாலிச்சரட்டினை எந்தச் சூழலிலும் கழற்றி வைக்கக் கூடாது. சாஸ்திர ரீதியாக இது முற்றிலும் தவறான செயல்தான். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?நாக்கில் மச்சம் இருந்தால் அவர்கள் கூறுவது பலிக்கும் என்கிறார்களே.?

– வண்ணை கணேசன், சென்னை.
உண்மைதான். இதுபோன்று நாக்கில் மச்சம் இருப்பவர்களின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி என்கிற கிரகத்தின் பலன் கூடியிருக்கும். சனியின் பலத்தினால் அவர்கள் சொல்வது பலித்துவிடும். இதனை எதிர்மறையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அமைப்பை உடைய மனிதர்கள் தங்கள் பலத்தினை உணர்ந்து மற்றவர்களுக்கு நல்ல வார்த்தைகளைத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நற்பெயரை அடைய முடியும். மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு இறைவனின் அருளால்தான் நமக்கு இந்த சக்தி கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து நல்வார்த்தைகளைச் சொல்லி அது மற்றவர்களுக்கு பலிக்கும்போது அதன் மூலமாக இவர்களும் வளர்ச்சி அடைய முடியும். இது ஒரு வகையில் பலம்தானே தவிர கருநாக்கு என்று பழித்துப் பேசுவது கூடாது.

?இரவில் தூங்கும்போது கெட்ட கனவு வருகிறது. அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

– கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.
‘தூர்வா து:ஸ்வப்ன நாசினீ’ என்று வேதம் சொல்கிறது. அதாவது விநாயகப்பெருமானுக்கு அர்ச்சிக்கப்பட்ட அறுகம்புல்லை தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தால் கெட்ட கனவுகள் என்பது நிச்சயம் வராது. இது போன்று கனவுத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் அருகிலுள்ள விநாயகப்பெருமான் ஆலயத்திற்கு இரவு நடைசாற்றுவதற்கு முன்னால் சென்று அர்ச்சகரிடம் சொல்லி விநாயகருக்கு அர்ச்சனை செய்த அறுகம்புல்லை சிறிதளவு பிரசாதமாகப் பெற்றுவந்து உறங்குவதற்கு முன்னால் தலைமாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். காலையில் எழுந்து அவற்றை அருகிலுள்ள மரத்தடியில் போட்டுவிடலாம். இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து பாருங்கள். முற்றிலுமாக கனவுத்தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

?திருவோண நட்சத்திரம் மகர ராசியில் பிறந்த ஆண்களுக்கு எந்த ராசி, நட்சத்திரம் பெண் அமைந்தால் நன்றாக இருக்கும்?

– மு.விஜயராணி, ராமநாதபுரம்.
இது போன்று ராசி நட்சத்திரம் வைத்து பொருத்தம் பார்ப்பது முற்றிலும் தவறு. அவரவருடைய ஜாதக பலம்தான் திருமண வாழ்வினைப் பற்றித் தீர்மானிக்கும். நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதை விட ஜாதக பலத்தினைத் தெரிந்துகொண்டு திருமணம் செய்வதே நற்பலனைத் தரும்.

?ஜாதகத்தில் வக்ரம் பெற்றுள்ள கிரகங்களைத் தெரிந்துகொள்வது எவ்வாறு?

– என்.ராமச்சந்திரன், சென்னை.
அதனை உங்கள் ஜாதகத்திலேயே குறிப்பிட்டிருப்பார்களே. எந்த கிரகம் வக்ரம் பெற்றுள்ளதோ அந்த கிரகத்தின் பெயருக்கு அருகில் (வ) என்றோ அல்லது ஆங்கில எழுத்தான (ஸி) என்றோ குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள கிரகம் உங்கள் ஜாதகத்தில் வக்ர பலம் பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வக்ரம் என்றால் கிரகங்கள் பின்புறமாக செல்லாது. அந்த கிரகங்களின் வேகம் என்பது குறைந்திருக்கிறது என்றும் அந்த கிரகங்களால் உண்டாகக்கூடிய பலன் என்பது சற்று நிதானமாக நடக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சூரியன், சந்திரன் மற்றும் ராகு-கேது ஆகிய நான்கு கிரகங்களும் எந்த காலத்திலும் வக்ரகதியை அடைவதில்லை. குஜாதி ஐவர் என்று சொல்லப்படக்கூடிய செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் மட்டுமே அவ்வப்போது வக்ரகதியைப் பெறுகின்றன.

திருக்கோவிலூர் KB ஹரிபிரசாத் சர்மா

The post ?இசைத்துறையில் சிறந்து விளங்க எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்? appeared first on Dinakaran.

Related Stories: