ஸ்ரீ மோதேஸ்வரி மாதங்கி கோயில்

குஜராத் மாநிலத்தின் பருச் நகரில் அரசுகாலனியில் இந்த கோயில் அமைந்துள்ளது. பார்கவ சமூகத்தின் தாயகம் குஜராத். பருச் குஜராத் மாநிலத்தில் நர்மதாநதியின் முகப்பில் உள்ள நகரம். சரி, முதலில் மாதங்கி யாரென அறிந்து கொள்வோம். மிக சக்தி வாய்ந்த பார்வதியின் அவதாரம். தசமகா தேவிகளில் ஒருவர்.வடநாட்டில், லட்சுமி – சரஸ்வதி – பார்வதியின் இணைந்த வடிவம் என வர்ணிப்பர். செல்வம், ஞானம், இசை, கற்றல், பேச்சு, அறிவு ஆகிய சக்தியைதருபவள். 64 கலைகளின் தலைவி. மற்றும், அவற்றில் நம்மை கை தேர்ந்தவர்களாக மாற்றுபவள். இவளுக்கு மாதங்கேஸ்வரி, ராஜமாதங்கி, ராஜசியாமளா, மோதேஸ்வரி, புவனேஸ்வரி என பல பெயர்களுண்டு. சரஸ்வதியின் தாந்திரிக வடிவம் எனவும் வர்ணிப்பர்.இவளுக்கு கர்நாடகா, ஆந்திராபிரதேஷ், தமிழ்நாட்டில் திருநாங்கூர், குஜராத்தில் மோத்ரா என பல இடங்களில் கோயில்கள் உண்டு. குறிப்பாக குஜராத்தில் மகாதேவ் த்ரிஜ் மோத் பனியாக்களின் குலதேவி. இவர்கள் மகாமாதம் (ஆங்கில மாதம் பிப்ரவரி) 13ஆம் தேதியை குலதேவி தினமாக கொண்டாடுகின்றனர்.

இது ஏன்? அறிந்து கொள்வோமா?பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரு சமயம், சன்யாசிகள், ரிஷிகளுக்காக தர்மாரண்யா என்ற பகுதியை உருவாக்கி அவர்களையும் படைத்து நடமாடவைத்து வேதங்களைக் கற்கவைத்து, வேத சம்ஸ்கிருத இடமாக அதனை மாற்றினர். பல காலம் இங்கு வேதம் செழித்தது. ஒரு சமயம் இங்கு கர்னாடா என்ற பிசாசு நடமாடி அனைவரையும் துன்புறுத்தியது. அதற்கு வேத கோஷங்கள், கர்ண கொடூரமாக தெரிந்தன. அதனால், வேதம் ஓதினாலே அவர்களை படாத பாடு படுத்தியது. ஒரு கட்டத்தில், இம்சை தாங்க இயலாமல் போனபோது பார்வதியை பிரார்த்தித்து, அவன் கொட்டத்தை அடக்கி அவனை இல்லாமல் செய்யவேண்டும் என வேண்டினர். அவர்களுடைய தொடர் பிரார்த்தனையால், பார்வதிதேவி வாயிலிருந்து நெருப்பு வெளிப்பட்டது.அதிலிருந்து அன்னை வெளிப்பட்டாள். கர்னாட்டை பிடித்து அழித்தாள். பிராம்மணர்கள், சன்யாசிகள், பனியா இனமக்கள் மகிழ்ந்தனர். அத்துடன் தேவியிடம் தாங்கள் இங்கு நிரந்தரமாய் தங்கி இந்த பகுதி மக்களை என்றென்றும் காத்து அருள வேண்டும் என வேண்டினர்.அன்னை சம்மதித்து தன்னுடைய கோலத்தை சிலையாக நிரந்தரமாக நிறுத்திச் சென்றார். அனைவரும் இணைந்து சிறு கோயில் எழுப்பினர்.

இன்று கோயில் கம்பீரமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தேவி, கர்னாட் அசுரனை நிர்மூலம் செய்த நாளை, மக்கள் விழா, விருந்து என கொண்டாடுகிறார்கள். இங்கிருந்த பழைய கோயிலுக்கு அவரவர் காலத்தில் ராமரும், தர்மரும் வந்து சென்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இனிகோயிலுக்கு போவோமா?!உயர்த்தப்பட்ட மேடையில் கட்டப்பட்ட கல்யாண மகால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. பத்து படிகள் ஏறி கோயில் மண்டபத்தை அடைய வேண்டும் வழியில் பக்கவாட்டில் வெள்ளைச்சிங்கம் சிலை நம்மை இரு புறமும் வரவேற்கிறது. தூண்கள்தான் மொத்த கோயிலையும் தாங்குகின்றன. அழகான சிற்பங்கள் மற்றும் சிக்கலான கட்டடக் கலையை அவற்றில் ரசிக்கலாம். அடுத்து நுழைவு வாயிலின் உள்ளே அழகாக செதுக்கப்பட்ட மயில்கள் நம்மை இருபுறமும் வரவேற்கின்றன. மேலே வெளியே மிகச் சிறிய குஜராத்தி பாணி கோபுரம். அதன்மீது ஒற்றை தங்கக்கலசம் பொருத்தப்பட்டுள்ளது. சிவன் கோயிலில், சிவனுக்கு நேர் எதிரே நந்தி இருப்பது போல், இங்கு சிங்கச்‌சிலை அம்மனைப் பார்த்தபடி உள்ளது. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள ஹால், வேலைப் பாடுகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரையிலும் நுணுக்கமான செதுக்கல்கள். ரசித்து மேலே செல்கிறோம்.

கர்ப்பகிரகத்திற்கு முன்னால் ராஜஸ்தானி பாணியில் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்காரங்களைக்கண்டு வியக்கிறோம். கர்ப்பகிரகத்தினுள் அம்மன், அழகு தெய்வமாக ஜொலிக்கிறாள். ஆமாம் தலையில் கீரிடம், மூக்கில் வளையம், கழுத்தையே மறைக்கும் அளவுக்கு நகைகள், கூடுதலாக வண்ண மாலைகள், இடுப்பிலும் நகைகளுடன் சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அலங்காரமாகக்காட்சி தருகிறாள். நாலு கைகள். இது தவிர உடலில் வலதுபுறம் சூலமும், இடது புறம் நீண்ட வாளும் வைத்துக்கொண்டிருக்கிறாள். சலவைக்கல்லால் ஆன சிலை அழகை மேலும் கூட்டுகிறது. அடியை மறைத்து இருபுறமும் புடவைகள் சார்த்தப்பட்டுள்ளன. கண்குளிர தரிசித்துவிட்டு வெளியே வருகிறோம். கோயிலினுள் மேலும் விநாயகர் சந்நதி, சிவன் சந்நதி மற்றும் ராதா – கிருணன் சந்நதி ஆகியவையும் உள்ளன.இந்த மோதேஸ்வரி அம்மனை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் அமானுஷ்ய சக்தி, எதிரிகளை கட்டுப் படுத்தவும் மக்களைக் கவரும்வகையில் பேசவும், கலைகளில் சிறக்கவும் செய்யலாம்.காலை 6மணி முதல் இரவு 8.30 மணி வரை. பருச் ரயில் நிலையத்திலிருந்து2.5 கி.மீட்டர். அகமதாபாத்திலிருந்து பருச் தூரம் 195 கி.மீட்டர்.

ராஜி ராதா

The post ஸ்ரீ மோதேஸ்வரி மாதங்கி கோயில் appeared first on Dinakaran.

Related Stories: