பந்திர்வன் ராதே கிருஷ்ணா!

ராதாஷ்டமி (ராதையின் பிறந்த நாள்) 11.9.2024

கிருஷ்ணன் – ராதா ஜோடிக்கு கல்யாணம் நடந்துள்ளதா?! நடந்துள்ளது என்கின்றனர் ராதா கிருஷ்ணா பக்தர்கள். எங்கே நடந்தது? எப்படி நடந்தது. யார் செய்து வைத்தார்கள்?! அறிந்து கொள்வோமா? வாருங்கள்…பிருந்தாவன் கிருஷ்ணன் – பலராமர் கோயிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பந்திர்வன் என்ற காட்டில் கல்யாணம் நடந்துள்ளது. செய்து வைத்தவர் பிரம்மா. பிருந்தாவனை சுற்றி ஏராளமான காடுகள் உள்ளன.

கிருஷ்ணன் உட்பட மாடு மேய்க்கும் ஆண், பெண் சிறார்கள் அங்கு சென்று வருவதுண்டு. அந்த வகையில், பந்திர்வன் காட்டுக்கும் செல்வார்கள். அங்கு மாடுகளை மேய்க்க விட்டுவிட்டு சிறார்கள் சுற்றி விளையாடுவார்கள். இந்த குழுவில் கிருஷ்ணன் மற்றும் ராதாவும் உண்டு. ஒரு நாள் திடீரென பிரம்மா வந்தார். கிருஷ்ணன் பால்ய பருவத்திலிருந்து வாலிபனாகவும், ராதாவும் வளர்ந்த பெண்ணாக மாறி இருந்தார். அவர்கள் இருவரையும் ஜோடியாக அங்கு நின்ற அரச மரத்தின் கீழே நிறுத்தி, தன்னுடன் எடுத்து வந்திருந்த சிந்தூரை கிருஷ்ணனிடம் கொடுத்து, ராதாவின் நெற்றியில் வைக்கச் சொன்னார். அடுத்து தன்னிடம் இருந்த தாலியை ராதைக்கு கட்டச் சொன்னார். தேவர்கள் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தனர்.

இந்த கல்யாணம் ஏன்?

ராதா, லட்சுமியின் வடிவம். இதன் பிறகு ராதா கிருஷ்ணன் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், கிருஷ்ணன் துவாரகை செல்வார். அவர் வாழ்க்கையே மாறிவிடும். அவதாரம் எடுத்தவர்களை இணைத்து தெய்வீக ஜோடியாக பார்க்க பிரம்மாவுக்கும் தேவர்களுக்கும் ஆசை. அதன் விளைவே இந்த திருமணம். இணைத்து வைத்ததும், பிரம்மா நழுவிவிட்டார். தெய்வீக ஜோடியும் தன்னை மறந்து இருந்தனர். நேரம் ஓடியதும், கிருஷ்ணன் வாலிப பருவத்தில் இருந்து, சிறுவனாக மாறினான். ராதாவும் தன்னிலை உணர்ந்து, தன்னை மீண்டும் சிறுமியாக்கிக் கொண்டார். “ஸ்வாக்கிய ராசா’’ என்றால் திருமண உறவு. “ஸ்வாக்கிய ராசா’’ என்றால் எந்த சமூக அடித்தளமும் இல்லாத கந்தர்வ திருமண கோலம். இந்த இடத்தில் தற்போது சிறு கோயில் உள்ளது.

நுழைவு வாயில் எளிமையாக உள்ளது. அதனை தாண்டி நடந்தால், கோயில் சுற்றி தோட்டம் உள்ளது. கோயிலுக்கு வெளியே ஒரு கல்யாண மண்டபம் உள்ளது. அதன் நடுவில் அக்னி குண்டம் உள்ளது. ஆமாம்.. கிருஷ்ணன் ராதாவுக்கு திருமணம் நடந்த இடத்தில், ராதே கிருஷ்ணா பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்கின்றனர். அவர்களுடைய உறவுகள் அமர ஏதுவாய் நிறைய சிமிண்ட் பெஞ்கள் உள்ளன. இதனையும் தாண்டினால், சிறு கோயில். அசப்பில் வீடுதான். கர்ப்பகிரகத்துக்கு மேலே ஆறு பட்டை கூம்பு வடிவ சிறிய கோபுரம். அதனை வணங்கியபடி உள்ளே சென்றால், நேராக கர்ப்பகிரகம்தான்.

அங்கு இடது புறம் கிருஷ்ணனும், வலது புறம் ராதாவும் மாலையுடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் பிரம்மா திருமணத்தை நடத்தி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.இதேபோன்று மற்றொரு கல்யாண மண்டபத்தில், கிருஷ்ணன் ராதாவுக்கு பொட்டு வைப்பது போல் ஒரு சிலை உள்ளது. பலராமர்க்கு சிறிய சந்நதி ஒன்றும் உள்ளது. தோட்டத்திலும், கல்யாண காட்சி சிலை வைத்துள்ளனர்.

ராதா கிருஷ்ணனின் திருமணம் நடந்த இரட்டை ஆலமரங்கள் இன்றும் உள்ளன. சுற்றி அதனை பாதுகாக்க வேலி போட்டுள்ளனர். அருகில் ஒரு கிணறு உள்ளது. கிருஷ்ணன், ஒரு இடத்தில் தன்னுடைய புல்லாங்குழலால் தட்டினார். அதனால் வந்த கிணறு இது என கூறுகின்றனர். திருமணத்தை “பயஹூலா உத்சவ்’’ என அழைக்கின்றனர். “புலேரா தீஜ்’’ அன்று இந்த விழா நடக்கிறது. மேற்கூறிய கதைக்கு, ஆதாரம் “பிரஹாம் வைவர்த புராணம்’’ மற்றும் “காக சம்ஹிதா’’ என்னும் நூல்களில் உள்ளது.

இங்கு கொண்டாடப்படும் விழாக்கள்:

1. ராதாஷ்டமி (ராதாவின் பிறந்த நாள்).
2. கிருஷ்ண ஜெயந்தி.
3. ஷரத் பூர்ணிமா.
4. ஹோலி பண்டிகை.
கோயில் திறப்பு: காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை. எப்படி செல்வது: மதுராவிலிருந்து 27கி.மீ., தூரத்தில் உள்ளது.

ராஜி ராதா

The post பந்திர்வன் ராதே கிருஷ்ணா! appeared first on Dinakaran.

Related Stories: