வேலை வாய்ப்பற்ற 1996 பேருக்கு ₹76.30 லட்சம் உதவித்தொகை

கிருஷ்ணகிரி, ஆக.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2023-24ம் நிதியாண்டில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் 1996 பேருக்கு ₹76.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, வேலை அளிக்கும் நிறுவனத்தையும், வேலை தேடுபவர்களையும் ஒருங்கிணைத்து, வேலைவாய்ப்பையும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் உருவாக்கி வருகிறது. தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்விற்கான இலவச பயற்சியினை வழங்கி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 1,02,058 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலகங்களில் 52,368 பதிவுதாரர்கள் பெண்கள், 49,690 பதிவுதாரர்கள் ஆண்கள் ஆவர்.

இந்நிலையில், பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசால் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொதுப்பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும், கல்வித்தகுதிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-24ம் நிதியாண்டில் 1,765 பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ₹59 லட்சத்து 16 ஆயிரத்தும் 300, 231 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ₹17 லட்சத்து 13 ஆயிரத்து 200 என மொத்தம் 1996 பயனாளிகளுக்கு ₹76 லட்சத்து 29 ஆயிரத்து 500 ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு வேலைக்காக காத்திராமல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிடும் நோக்குடன், இலவசமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் அலுவலக வளாகத்திலேயே சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் இலவசமாக நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த நிதியாண்டில் மட்டும் 11 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2047 மனுதார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வேலை வாய்ப்பற்ற 1996 பேருக்கு ₹76.30 லட்சம் உதவித்தொகை appeared first on Dinakaran.

Related Stories: