டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

போச்சம்பள்ளி, செப்.11: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா, வீரமலை கிராமத்தில் சதுர்த்தி விழாவின்போது விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டனர். மேலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்திருந்தனர். பிரதிஷ்டை செய்த சிலைகளை நேற்று முன்தினம் மாலை டிராக்டரில் ஏற்றிச் சென்று வீரமலை ஏரியில் கரைத்தனர். அந்த டிராக்டரை துறிஞ்சிமரத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அருள்மணி(35) என்பவர் ஓட்டினார். சிலைகளை கரைத்ததும், அனைவரையும் ஊரில் விட்டுவிட்டு, இரவு 12 மணியளவில் அருள்மணி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ஏரிக்கரையில் 20 அடி பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அருள்மணி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர், உறவினர்கள் சென்று பார்த்தபோது, டிராக்டர் கவிழ்ந்து அருள்மணி பலியானது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடம் சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான அருள்மணிக்கு மகாலட்சுமி(32) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்துவிட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: