நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்க தடை விதிக்கப்பட்டது.. இதனால், நேற்று காலை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்வர். விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் கூட்டம் களைகட்டும். இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது.

இதனால், அருவியில் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அருவிப் பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அருவிக்கு வரும் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை அறியாமல் நேற்று அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: