வயநாட்டைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவுக்கு காரணம் என்ன?: சமூக ஆர்வலர்கள்!

திருவனந்தபுரம்: இயற்கை வளங்களை அழித்தது தான் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 300ஐ தாண்டிவிட்டது. மண்ணுக்கடியில் இதைவிட அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையிலிருந்தும், சம்பவ இடத்திலிருந்து 35 கிமீ தொலைவிலுள்ள ஆற்றிலிருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும் அருகிலுள்ள வனப்பகுதியிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. கேரளாவில் மழைக்காலங்களில் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்ற போதிலும், தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகவும் கொடூரமாக உள்ளது.

சூரல்மலை, முண்டக்கை என்ற இரண்டு கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. 350க்கும் மேற்பட்ட வீடுகள், கோயில்கள், சர்ச்சுகள், உள்பட வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம், கடைகள் உள்பட கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகி விட்டன. இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்திற்கு மனிதர்களின் பேராசை தான் காரணமாகும். கேரள மாநிலம் முழுவதும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ஆகும். எங்கு பார்த்தாலும் மலையும், வருடத்தில் எல்லா நாட்களிலும் ஓடும் ஆறுகளும் என கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கேரளா முழுவதும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மனிதர்கள் அழிப்பது தான் அடிக்கடி ஏற்படும் இந்த சீற்றத்திற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இடுக்கி, வயநாடு உள்பட பகுதிகளில் உள்ள மலைகளில் கல்குவாரிகளை அமைத்ததும், அங்கு விடுதிகளை கட்டி மனிதர்கள் குடியேறியதும் தான் நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் உள்ள வனங்களிலும், மலைகளிலும் ஏராளமான சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு அருமையான சீசன் நிலவுவதால் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். அரசுக்குத் தெரியாமல் ஏராளமான கட்டிடங்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன. மனிதர்களின் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்தினால் மட்டுமே இயற்கை நம்மை சோதிக்காமல் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

 

The post வயநாட்டைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவுக்கு காரணம் என்ன?: சமூக ஆர்வலர்கள்! appeared first on Dinakaran.

Related Stories: