வேறு வழியில் போக சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்

 

பெரம்பூர், ஜூலை 29: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (34). இவர், செம்பியம் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24ம் தேதி இரவு பெரம்பூர் பெரியார் நகர் 70 அடி சாலை பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக வந்த வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர், காவலர் சரஸ்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சுற்றிப் போக முடியாது எனக் கூறி ஆட்டோவை எடுத்து வேகமாக காவலர் சரஸ்வதி மீது மோதினார். இதில், அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற காவலர் சரஸ்வதி இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ பதிவு எண் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து புழல் டேவிட் ஜெயவேல் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (55) என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வேறு வழியில் போக சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர் appeared first on Dinakaran.

Related Stories: