துபாயில் தமிழ் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

துபாய்: எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் ’ஓரிதழ்ப்பூ’ நாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் துபாயில் நடந்தேறியது. துபாய் தேரா – சரவணபவன் உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான இலக்கிய வாசகர்களும் துபாயின் முக்கியத் தமிழ் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையைக் களமாகக் கொண்டு அய்யனார் விஸ்வநாத் எழுதிய இந்த ஓரிதழ்ப்பூ நாவல், இலக்கிய வாசகர்களின் பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

நிகழ்வை ஆசிப் மீரான் அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். மூத்த எழுத்தாளர் ஆபிதின் தலைமை ஏற்க - இளம் எழுத்தாளர்களான ஜெஸிலா, ஷோபியா, ராம்சுரேஷ், கனவுப் ப்ரியன்,சசி குமார், முத்துகுமார், பிரபு, குறிஞ்சி நாதன், அசோக், பிலால் அலியார், பாலாஜி, மஜீத், ராம்கி, நெருடா, பால்கரசு  ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இளம் வாசகர்களின் விமர்சனங்களும், புதிய வாசகர்கள் நாவலை முன் வைத்து உரையாடியதும் நிகழ்வின் முத்தாய்ப்பாக இருந்தது.

அய்யனார் விஸ்வநாத் தனது ஏற்புரையில் ஓரிதழ்ப்பூ நாவலை எழுதிய பின்னணியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த நாவல் பின்நவீனத்துவத்தின் கூறுகளை உள்ளடக்கியது என்பதால் இவ் விழாவிற்கு மேடை, சிறப்பு விருந்தினர்கள் போன்ற வழக்கமான நூல் வெளியீட்டு விழா மரபுகள் கிடையாது என்பதையும் கூறினார். பின்நவீனக் காலகட்டத்தில் வாசகர்களே முதன்மையானவர்கள் என்பதால் வாசித்த அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தாம் என அவர் கூறியது வித்தியாசமாக இருந்ததாக பார்வையாளர்கள் கூறினர்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக துபாயில் இலக்கிய விழாக்களில் பங்கு கொள்ளும் பலரும் இதுபோன்ற ஓர் இலக்கிய விமர்சனக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதன் முறை என்பதாக அவரவர் முகநூல் பக்கங்களில் எழுதி வருகிறார்கள்.

வரவேற்புரையை ரமா மலர் நிகழ்த்த நன்றியுரை கூறி நந்தகுமார் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Related Stories: