உயர் ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த விழாவில் பாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கார்கிலில் 1999ல் நடந்த போரில் பொய்யும் ,பயங்கரவாதமும் உண்மை முன் மண்டியிட்டன. பாகிஸ்தான் தனது கடந்த காலத்திலிருந்து எதையும் இன்று வரை கற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதத்தின் தலைசிறந்தவர்கள் எனது குரலை நேரடியாகக் கேட்கும் இடத்தில் நின்று நான் பேசுகிறேன். இந்த பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு அவர்களின் மோசமான நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் எப்போதும் தோல்வியை சந்தித்துள்ளது. பயங்கரவாதிகளின் தீய எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது. இப்போதும் பயங்கரவாதம் மற்றும் மறைமுக போரை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வருகிறது. எங்கள் துணிச்சலான வீரர்கள் அனைத்து பயங்கரவாத முயற்சிகளையும் நசுக்குவார்கள். கார்கில் போரில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமை ஆகியவற்றின் நம்பமுடியாத உதாரணத்தை நாங்கள் முன்வைத்தோம். கார்கில் போரில் நமது வீரர்கள் தேசத்துக்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை நினைவூட்டுகிறது.
நமது ஆயுதப் படைகளின் வலிமைமிக்க சூப்பர் ஹீரோக்களுக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறது. கார்கில் போரில் கிடைத்த வெற்றி எந்த அரசாங்கத்திற்கோ அல்லது எந்தக் கட்சிக்கோ கிடைத்ததல்ல. இந்த வெற்றி நாட்டுக்கு சொந்தமானது. இவ்வளவு உயரமான பகுதியில் ராணுவ வீரர்கள் எப்படி கடினமான நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. தாய்நாட்டைக் காக்க உயர்ந்த தியாகம் செய்த நாட்டின் துணிச்சலான மகன்களுக்கு நான் தலை வணங்குகிறேன். லடாக் அல்லது ஜம்மு காஷ்மீர் என எதுவாக இருந்தாலும், வளர்ச்சியின் வழியில் வரும் அனைத்து சவால்களையும் இந்தியா முறியடிக்கும். இன்றைய ஜம்மு காஷ்மீர் கனவுகள் நிறைந்த புதிய எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறது. பூமியில் உள்ள இந்த சொர்க்கமான பகுதி அமைதி மற்றும் செழிப்புக்கான திசையில் வேகமாக நகர்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* நாடாளுமன்றம் அஞ்சலி
கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடாளுமன்றம் அஞ்சலி செலுத்தியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சிறிது நேரம் மவுனமாக நின்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, போரின் போது கடினமான சூழ்நிலையிலும் வீரர்கள் காட்டிய துணிச்சலை நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
The post கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்த பிறகும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை: பிரதமர் மோடி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.