15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் காயங்களுடன் பொதுமக்கள் மீட்டனர் வேலூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய

வேலூர் ஜூலை 18: வேலூரில் மாங்காய் மண்டி அருகே பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டிய 15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபரை காயங்களுடன் பொதுமக்கள் மீட்டனர். வேலூர் மாங்காய் மண்டி எதிரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. சுமார் 15 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வேலூரில் இருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அந்த ராட்சத பள்ளத்தில் பைக்கோடு விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று லேசான காயமடைந்திருந்த அவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவரது பைக்கையும் கயிறு கட்டி மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இந்த காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அதை சுற்றி கயிறு கட்டி வைத்துள்ளனர். சில நேரங்களில் மண் சரிந்து உள்ளே விழுகிறது. இரவிலும் போதிய வெளிச்சம் இல்லாததால் அந்த பகுதியை ஆபத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் அங்கு சாலையும் அமைக்கப்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் காயங்களுடன் பொதுமக்கள் மீட்டனர் வேலூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய appeared first on Dinakaran.

Related Stories: