ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில் பூங்கா பணிகளை விரைந்து முடியுங்கள்

*அமைச்சர் கே.என்.நேரு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

திருச்சி : ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில் பறவைகள் பூங்கா பணிகளை விரைந்து முடியுங்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா கட்டுமானப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 எக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்படுகின்றன.

பூங்காவில் அரிய வகை பறவைகளும் வளரக்கப்பட உள்ளன. மேலும் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என பண்டைய தமிழர்களின் ஐவகை நிலப்பரப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டு வருகிறது. மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலைவனம் போன்றவை தத்துரூபமாக அமைக்கப்படுகிறது. தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமான அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

இதில் 50 பேர் அமரும் வகையில், அறிவியல் பூர்வமான படங்கள் திரையிடப்படும் மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் மிக குறைவாக உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு இந்த பறவைகள் பூங்கா வரப்பிரசாதமாக அமையும். பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர், பணிகளை விரைவாகவும், சிறந்த முறையிலும் முடிக்கும்படி அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி கமிஷனர் சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவா் துரைராஜ், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில் பூங்கா பணிகளை விரைந்து முடியுங்கள் appeared first on Dinakaran.

Related Stories: