3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு

சென்னை: எதேச்சதிகாரமாக உருவாக்கிய மோடி அரசின் மக்கள் விரோத 3 சட்டங்களை எதிர்த்து நடைபெறும் மக்கள் பேராட்டங்களுக்கு மதிமுக ஆதரவளிக்கும் என்று வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து, 3 சட்டங்களை ஜூலை 1ம் தேதி முதல் ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்களோடு விவாதித்து, கருத்தை அறியாமல் அவர்களை அவையிலிருந்து வெளியேற்றிவிட்டு, அரசியல் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசு எதேச்சதிகாரமாக உருவாகியதுதான் இந்த 3 சட்டங்கள்.

மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராகவும், நீதிமன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அரசியல் கட்சியினரை கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்லும் வகையிலும், ஆயுதப் பயிற்சி, ஊர்வலங்களை நடத்த அனுமதிக்கும் வகையிலும் ஒன்றிய அரசு இந்த மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானதாகும். எனவே, இந்தச் மக்கள் விரோதச் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை எதிர்த்து நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்.

The post 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: