காங்கிரஸ் அல்லாதவர், டீ விற்றவர் 3ம் முறை பிரதமரானதால் எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம்: பாஜ எம்பிக்களிடம் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘காங்கிரஸ் அல்லாத ஒருவர் 3வது முறையாக பிரதமரானதால் எதிர்க்கட்சிகள் வருத்தத்தில் உள்ளன’ என பாஜ கூட்டணி எம்பிக்களிடம் பிரதமர் மோடி கூறி உள்ளார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, கூட்டணி கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் மோடி பேசுகையில், ‘‘முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒருவர், அதுவும் டீ விற்றவர், 3வது முறையாக பிரதமராக பதவியேற்றதால் எதிர்க்கட்சிகள் வருத்தமடைந்திருக்கின்றன. அனைத்து எம்பிக்களும் டெல்லியில் உள்ள பிரதமர் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்க்க வேண்டும். அங்கு அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை வரலாறும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதை முந்தைய எந்த அரசும் செய்யவில்லை. காங்கிரஸ் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்த பிரதமர்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு வந்தது.

அவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்படுவதை நான் உறுதி செய்துள்ளேன்’’ என்றார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் மக்களவையில் ராகுல் பேசியது குறித்து கூட்டத்தில் குறிப்பிடப்பட்டதா என கேட்டதற்கு, ‘‘ராகுல் காந்தி பேச்சு குறித்து பிரதமர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற விதிகளை பின்பற்ற வேண்டும்.

மூத்த உறுப்பினர்களிடம் இருந்து சிறந்த நடைமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும், தங்கள் தொகுதி விவகாரங்களை திறம்பட எழுப்பவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். எந்தவொரு பிரச்னை குறித்து ஊடகங்களிடம் பேசும் முன் எம்பிக்கள் கவனமாக இருக்கவும், தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டுமெனவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்’’ என்றார்.

The post காங்கிரஸ் அல்லாதவர், டீ விற்றவர் 3ம் முறை பிரதமரானதால் எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம்: பாஜ எம்பிக்களிடம் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: