ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

திருமலை: கிருஷ்ணா மாவட்டத்தில் நள்ளிரவு சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை தீ வைத்து எரித்துக்கொண்டிருந்த 2 கார் டிரைவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூர் தொகுதி ஏலமலக்குதுரு கிருஷ்ணா நதிக்கரையோரம் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி 2 பேர் நின்று தீவைத்து எதையோ எரித்துக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பொதுமக்கள் அருகே சென்று பார்த்தனர். அதில் முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க் எரித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவை முக்கியமானதாக இருக்கலாம் எனக்கருதி, அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் பொதுமக்களை கண்டதும் அவர்கள் காரில் ஏறி தப்பினர். பொதுமக்கள் விரட்டி 2 பேரையும் பிடித்தனர். பின்னர் பெனமலூர் எம்எல்ஏ போடே பிரசாத் மூலம் தெரிவித்து அவர் மூலம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் சமீர் சர்மாவின் கார் டிரைவர் நாகராஜ், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த முத்தியால ராஜூவின் கார் டிரைவர் சாய் கங்காதர் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநில சுரங்கம் மற்றும் கனிமவளத்துறைக்கு தொடர்பான ஆவணங்கள், ஹார்டிஸ்க், கேசட்டுகளை தீயில் எரித்ததும், அதனை சமீர்சர்மா உத்தரவின்படி எரித்ததாகவும் தெரிவித்தனர்.
ஆந்திராவில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையில் கடந்த ஆட்சியில் ₹30 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக அந்த துறைகளின் முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரரெட்டி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆலோசனையின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சமீர் சர்மா, முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த முத்தால ராஜு ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் துறையின் முக்கிய ஆவணங்களை கொண்டு தங்களது டிரைவர்கள் மூலம் தீ வைத்து எரித்தபோது கையும் களவுமாக சிக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து எம்எல்ஏ பிரசாத் கூறுகையில், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் அரசு ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் என்றார். இதற்கிடையில், ஆவணங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்’ என கூறினார்.

The post ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: