முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 3: ஒன்றிய அரசு நேற்று முன்தினம் முதல் புதிய முப்பெரும் சட்டங்களை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கோர்ட் முன்பாக வக்கீல் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசு இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து, அவற்றிற்கு சமஸ்கிருத பெயர்களை வைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வக்கீல்கள் போராட்ட களத்தில் குதித்தனர். தமிழ்நாடு வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்வக்கீல் சங்கம் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை கோர்ட் பணிகளில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தது. ஜாக் வக்கீல் சங்கத்தை சேர்ந்த திருச்சி மாவட்ட வக்கீல்கள் நேற்று முன்தினம் கோர்ட் வாசலில் ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து நேற்று காலை திருச்சி கோர்ட் வாயிலில் வக்கீல்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி செசன்ஸ் கோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மேஜிஸ்திரேட் கோர்ட் வக்கீல் சங்க தலைவர் முல்லை சுரேஷ் முன்னிலை வகுத்தார். செசன்ஸ் கோர்ட் வக்கீல் சங்க செயலாளர் சுகுமார் வரவேற்றார். மேஜிஸ்திரேட் கோர்ட் வக்கீல் சங்க செயலாளர் வெங்கட் நன்றி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நாளை காலை மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், வரும் 8ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி வக்கில் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக் சங்கம் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடத்தப்படும் எனவும் திருச்சி வக்கீல் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

The post முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: