ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தொடர் மழையுடன் குளிர்காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளை வாட்டி வதைத்தது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது. தொடர் மழையால் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் தெரு, லெட்சுமண தீர்த்தம் உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

நேற்று பகல் முழுவதும் சாரல் மழையுடன் பனிமூட்டமான வானிலை காணப்பட்டது. தொடர்ந்து தீவுப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் சுற்றுலா பயணிகள் கடும் குளிருக்கு ஆளாகியுள்ளனர். மழை காற்று காரணமாக அதிகாலை முதல் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ராமேஸ்வரம் 27.00 மி.மீ, தங்கச்சிமடத்தில் 33.00 மி.மீ, பாம்பன் 29.20 மி.மீ மழை பதிவானது. தீவில் ஒட்டு மொத்தமாக 8.9 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.

Related Stories: