வால்பாறை: வால்பாறை பகுதியில் நேற்று அதிகாலை மேக மூட்டத்துடன் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ள நிலையில், சில இடங்களில் கடும் மூடு பனி நிலவுகிறது. பகல் நேரத்திலும் வெயில் குறைந்து குளிரான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், கவர்க்கல் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்கள் சென்றது.
நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாலையோர மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததால், சில பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மூடுபனி நிலவும் நேரங்களில் வாகனங்களை மெதுவாக இயக்கவும், ஹெட்லைட் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
