நாகப்பட்டினம்: ஆஸ்திரேலியாவில் இருந்து 10,000 கிலோ மீட்டர் பறந்து வந்து நாகப்பட்டினத்தில் அடிபட்டு கிடந்த அரிய வகை சிவப்பு மூக்கு ஆளான் பறவையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். நாகப்பட்டினம் புதிய கடற்கரை ரயில்வே கேட் பகுதியில் அரிய வகை பறவை ஒன்று அடிப்பட்டு கிடந்தது. அந்த பறவையை, அங்குள்ள நாய்கள் பிடிக்க துரத்தியது.
இதை பார்த்த புதிய கடற்கரை பொறுப்பாளர் தேவராஜ், அந்த நாய்களை அடித்து விரட்டி விட்டு பறவையை மீட்டு தனது அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார். தொடர்ந்து நாகப்பட்டினம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் சியாம்சுந்தர் உத்தரவின் பேரில் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பறவையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் பரிசோதனை செய்த போது, அந்த பறவை ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகளவில் காணப்படும் சிவப்பு மூக்கு ஆளான் இனத்தை சேர்ந்ததும், ஒரு அடி நீளம், அரை கிலோ எடை கொண்டதும் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், கோடியக்கரையில் சீசன் காலம் என்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து 10,000 கி.மீ கோடியக்கரைக்கு பறந்து வந்த இடத்தில் தனது சிறகில் அடிப்பட்டதால் பறக்க முடியாமல் நாகப்பட்டினம் புதிய கடற்கரை அருகே விழுந்து கிடந்ததும் தெரிய வந்தது.
