சென்னை: அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாடு ஏற்றுமதித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதற்கு விரைந்து தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
அமெரிக்க வரியால் தமிழ்நாடு ஏற்றுமதி துறை பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.
இரு தரப்பு ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்க-முதல்வர்
இந்தியா- அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 50% வரியால் வர்த்தகத்தில் ஏற்பட்ட இடர்பாடு பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.
ஜவுளித் தொழிலை நம்பி 75 லட்சம் தொழிலாளர்கள்
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத்துறை ஏற்றுமதியின் அடித்தளமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் ஜவுளித் துறை சுமார் 75 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது.
