நெல்லை மாவட்டத்தில் மழை குறைந்ததை தொடர்ந்து விவசாய பணிகள் தீவிரம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கினால் அணைகளில் போதிய தண்ணீர் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில்தான் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர் மழை பெய்தது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதைதொடர்ந்து நெல்லை மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து சதம் அடித்தது. தொடர்மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. விவசாய பணிகளை பார்க்க முடியாத நிலை தொடர்ந்தது.

மேலும் பல இடங்களில் தொடர் மழைக்கு நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இதைதொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்தது. இதனால் வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீரும் வடிந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருவதால் மழையின் காரணமாக விவசாய பணிகளை ஒத்தி வைத்திருந்த விவசாயிகள் மீண்டும் விளைநிலங்களில் பணிகளை தீவிரப்படுத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், சேரன்மகாதேவி, மானூர், பாளை, சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வயல்களில் தொளியடிப்பது, நாற்றுக்களை நடுவது, நடப்பட்ட நாற்றுக்களுக்கு உரம் இடுவது, களை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: