திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது

சென்னை: நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு காரில் ஆயுதங்களுடன் சென்ற கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவை செங்கல்பட்டு தனிப்படை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தியபோது, அரிவாளால் இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு மலைப்பகுதிக்கு தப்பி ஓட முயன்ற சீர்காழி சத்யாவை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும், அவருடன் வந்த ரவுடிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுரை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் சத்யா(எ) சீர்காழி சத்யா(41). பிரபல தாதாவான சீர்காழி சத்யா, கோவையை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராமுக்கு வலதுகரமாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.

2017ம் ஆண்டு கும்பகோணத்தில் வழக்கறிஞர் ராஜா என்பவரை கொலை செய்த நபர்கள் 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட வெட்டிப் படுகொலை செய்தார். அதேபோல், சீர்காழியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சகோதரர்கள் 2 பேரை வெட்டிக்கொன்றார். அதோடு இல்லாமல் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி, கூலிப்படைக்கு ஆட்கள் அனுப்புவது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் சீர்காழி சத்யா மீது உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால் தாதா சீர்காழி சத்யா காவல்துறையின் என்கவுண்டர் பட்டியலில் முதல் 3 இடத்தில் இருந்தார்.

2012 மார்ச் 29ம் தேதி கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தியும், இதுவரை குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எஸ்பி ஜெயகுமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக நபர்களாக 12 ரவுடிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நீதிமன்ற அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அந்த 12 ரவுடிகளில் முக்கியமான நபராக சீர்காழி சத்யா இருந்தார்.

திமுக ஆட்சியில் தற்போது ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தனது பாதுகாப்புக்காக கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா, 2021 ஜனவரி 20ம் தேதி பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜ மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்தார். அதன் பிறகு பாஜ மாநில கட்சி தலைமை தாதாவான கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவுக்கு கட்சியின் முக்கிய பதவி அளிக்கப்பட்டது.

அந்த பதவியை வைத்து தாதா சீர்காழி சத்யா திரைமறைவில் சட்டத்திற்கு விரோதமான பணிகளை செய்து வந்தார். அதேநேரம் கூலிப்படைக்கும் தனது ஆட்களை அனுப்பியும் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாஜவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் மது விருந்துகளுடன் நடந்தது. இந்த பிறந்த நாள் விழாவில் பாஜ முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அதோடு இல்லாமல் பிறந்த நாள் விழாவுக்கு காவல்துறையால் தேடப்பட்டு வரும் கூலிப்படை தலைவரான பிரபல தாதா சீர்காழி சத்யா தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் கவனத்திற்கு வந்தது. எஸ்பி உத்தரவுப்படி டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மாமல்லபுரம் விரைந்தனர். அப்போது பிறந்த நாள் விழா முடிந்து கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் செங்கல்பட்டு மார்க்கமாக சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் வடநெம்மேலியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் சீர்காழி சத்யாவின் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.

உடனே தனிப்படை போலீசார் மின்னல் வேகத்தில் பின் தொடர்ந்து செங்கல்பட்டு பழவேலி பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சீர்காழி சத்யாவிடம் கள்ளத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 3 அரிவாள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சீர்காழி சத்யாவை பிடிக்க முயன்றனர். உடனே சீர்காழி சத்யா தன்னுடன் வந்த 3 பேருடன் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடினார். ஆனால், இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் விடாமல் பின் தொடர்ந்து சீர்காழி சத்யாவை பிடித்தார். அப்போது சீர்காழி சத்யா கையில் வைத்திருந்த அரிவாளால் தனிப்படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அப்போது டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டனர். இதில் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவின் இடது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனே போலீசார் சீர்காழி சத்யாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமாருக்கு (31) கையில் 7 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சீர்காழி சத்யாவை டாக்டர்கள் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த 3 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட 4 பேரை திருக்கழுக்குன்றம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கதிரவன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கிடையே மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில், போலீசாரால் தேடப்படும் ரவுடிகள் பலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. பிறந்த நாள் விழாவில் பாஜ பிரமுகர்களும் கலந்து கொண்டனர். எனவே அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்த கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட 3 நபர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் பாஜ மாநில செயலாளரும் வக்கீலுமான அலெக்ஸ், ரவுடி சீர்காழி சத்யா வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: