நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்

டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இந்தியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது. “நீட் தேர்வு முறைகேட்டால் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் குடும்பங்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான குடும்பங்களை கவலை அடையச் செய்துள்ளது மிக முக்கியமான பிரச்னை, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இந்தியா கூட்டணி விரும்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மக்களவை இன்று காலை கூடியதும், முதலில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனு மூலம் கோரிக்கை வைத்தனர். ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையுடன் சேர்த்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

The post நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: