விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் 21 சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசியதாவது: முதல்வர் சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ், 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் விழுப்புரம் வட்டம், வழுதரெட்டி கிராமத்தில் 2.77 ஏக்கர் பரப்பில் ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில் 8,414 சதுர அடியில் நூலகத்துடன் கூடிய மணி மண்டபம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கட்டப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் இம் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெருந்தலைவரும், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான ஏ.கோவிந்தசாமி நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் விழுப்புரம் வட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 2.77 ஏக்கர் பரப்பில் ரூ.4 கோடியில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் முழு திருவுருவச்சிலையும், 5864 சதுர அடியில் நூலகத்துடன் கூடிய அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இதையும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் திறந்துவைக்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தவுடன் 21 சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: