திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: எம்எல்ஏ ரிஸ்வான் எச்சரிக்கை

பெங்களூரு: திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் கூறினார். பெங்களூரு, அல்சூரு திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபர்கள் மாஸ்க் அணிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு மத்திய மாவட்ட காங்., தலைவர் ராஜேந்திரன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த நிலையில் உடனடியாக அல்சூரு உதவி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவின் பேரில் போலீசார் முகமூடியை அகற்றினர்.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலை மற்றும் திருவள்ளுவர் பூங்கா அமைக்கும் பணிகளை தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் நேற்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:- திருவள்ளுவருக்கு யாராலும் அவமரியாதை செய்ய முடியாது. அதே நேரம் வள்ளுவர் சிலைக்கு முகமூடி அணிந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இந்த செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை பூங்கா, சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். திருக்குறளை கன்னட மற்றும் ஆங்கில மொழியில் ஒலி பரப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு பெங்களூருவின் அடையாளமாக திருவள்ளுவர் பூங்கா அமையும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி திருவள்ளுவர் பூங்கா புதிய பரிணாமத்துடன் அமையவுள்ளது. இந்த பணி இன்னும் 6 மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இது போல் திம்மையா சாலை , தமிழ்ப் பள்ளிக்கூட கட்டிடம் அமைக்கும் பணியும் விரைவுப்படுத்தப்படும், என்றார்.

The post திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: எம்எல்ஏ ரிஸ்வான் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: