அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் காஞ்சிபுரம் எம்பி

மதுராந்தகம்: காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 2.21 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காஞ்சிபுரம் எம்பி செல்வம் திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் பேரூர் செயலாளர் எழிலரசன் தலைமையில் 15 வார்டுகளிலும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதையடுத்து அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நன்றி தெரிவிக்க சென்ற எம்பி செல்வத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா மற்றும் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், எங்கள் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி சீரமைக்கவேண்டும். பள்ளி நேரங்களில் பேருந்துகள் இயக்கவேண்டும். தேசிய ஊரக வேலை பணியை விரைவில் தொடங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக எம்பியிடம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மொரப்பாக்கம், பெரும்பாக்கம், எண்டத்தூர், கிளியாநகர், செம்பூண்டி, வேடந்தாங்கல் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் தம்பு தலைமையில் எம்பி செல்வம் வணிகர்களையும், விவசாயிகளையும், இளைஞர்களையும், பெண்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், ”தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். ரேஷன் கடை, பள்ளி கட்டிடம், சிமென்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும்” என உறுதியளித்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், மாவட்ட துணைச்செயலாளர் கோகுலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவக்குமார், பார்த்தசாரதி, சிவக்குமார், அவைத்தலைவர் ரத்தினவேலு, ஊராட்சி தலைவர்கள் சாவித்திரி சங்கர், வேதாச்சலம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

The post அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் காஞ்சிபுரம் எம்பி appeared first on Dinakaran.

Related Stories: