வங்கதேசத்துக்கு எதிராக ஆஸி. அபார வெற்றி: கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை; வார்னர் அதிரடி அரை சதம்

நார்த் சவுண்ட்: வங்கதேச அணியுடனான உலக கோப்பை சூப்பர்-8 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஆன்டிகுவா, விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. வங்கதேச தொடக்க வீரர்களாக டன்ஸிட் ஹசன், லிட்டன் தாஸ் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே டன்ஸிட் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேசத்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. தாஸ் – கேப்டன் நஜ்முல் ஷான்டோ இணைந்து 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். தாஸ் 16 ரன், ரிஷத் உசைன் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஷான்டோ 41 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஸம்பா சுழலில் ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் தவ்ஹித் ஹ்ரிதய் அதிரடி காட்ட… ஷாகிப் அல் ஹசன் 8 ரன் எடுத்து ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பேட் கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரின் 5வது பந்தில் மகமதுல்லா (2), 6வது பந்தில் மஹேதி ஹசன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரின் முதல் பந்தில் தவ்ஹித் (40 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாக, கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார். நடப்பு உலக கோப்பையில் பதிவான முதல் ஹாட்ரிக் இது. உலக கோப்பை வரலாற்றில் 8வது ஹாட்ரிக். வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் குவித்தது. டஸ்கின் அகமது 13 ரன், டன்சிம் ஹசன் சாகிப் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, ஆடம் ஸம்பா 2, ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 11.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டியதால் டிஎல்எஸ் விதிப்படி ஆஸி. 28 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் 31 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மிட்செல் மார்ஷ் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டேவிட் வார்னர் 53 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மேக்ஸ்வெல் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post வங்கதேசத்துக்கு எதிராக ஆஸி. அபார வெற்றி: கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை; வார்னர் அதிரடி அரை சதம் appeared first on Dinakaran.

Related Stories: