வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அரசின் 3 சட்ட திருத்தங்களை எதிர்த்தும், அந்த சட்டங்களின் பெயரை சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்தும், பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஸ்ரீராமன், துணைத் தலைவர் மயில்வண்ணன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்றத்தை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திருவொற்றியூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ராஜாகடை தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த சில வருடங்களாக ரூ.3 லட்சம் வாடகை செலுத்தி இயங்கி வருகிறது.

இந்த வாடகை கட்டிடத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கும், வழக்குகளுக்காக வரும் பொதுமக்களுக்கும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கிடையாது. மேலும் அந்த வாடகை கட்டிடமும் மிகவும் பழுதாகி இடிந்து விழும் நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் இந்த நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டக்கோரி, திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில், நேற்று மதியம் நீதிமன்ற வாயில் முன்பு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாடகை கட்டிடத்தை ராட்சத கயிறு கட்டி இழுக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்டன கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்த 3 சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

அம்பத்தூர்: இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயிலில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் கே.முரளி பாபு, துணைத் தலைவர் விஜயகுமார், அம்பத்தூர் வழக்கறிஞர் சங்கர் தலைவர் லட்சுமி ராஜரத்தினம், திருவள்ளூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் பார்த்த சாரதி, மார்க் நியூட்டன் மணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: