முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு: எம்எல்ஏ திறந்து வைத்தார்

கும்மிடிப்பூண்டி: முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள 186 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சி உள்ளது. இங்கு முத்துரெட்டிகண்டிகை, பாரதியார் நகர், ரெட்டிபாளையம், சிறுபுழல்பேட்டை காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 786 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் முத்துரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 186 குடும்ப அட்டைதாரர்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் சென்றுதான் ரேஷன் பொருட்களை பல ஆண்டுகளாக வாங்கி வருகின்றனர்.

இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் பலமுறை வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஒன்றிய குழு கூட்டங்களிலும் முத்துரெட்டி கண்டிகை பகுதிக்கு, பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டுமென நீண்ட நாளுக்காக கோரிக்கை வைத்து வந்திருந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தருமாறு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் இடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற எம்எல்ஏ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதற்கான ஆர்டரை திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக 10 நாட்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதிநேர ரேஷன் கடை வருவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மூர்த்தி வரவேற்றார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதாம்ம முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் மாலதிசங்கர், பவித்ரா விஜி, மாலதிபிரகாஷ், கிளைசெயலாளர் சரவணன், சேல்ஸ்மேன் நாகவேல் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜெயமணி, சண்முகம், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏமான டி.ஜெ.கோவிந்தராஜன் பகுதி நேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது முத்துரெட்டிகண்டிகை கிராம மக்கள் எங்கள் பகுதிக்கு ஏற்கனவே புதிய அரசு பேருந்து விடப்பட்டதற்கும், இந்த ரேஷன் கடை திறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.

The post முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: