சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேர் கைது

புவனகிரி: சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பிரபாகர், சிதம்பரம் ஏஎஸ்பிக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அதில், ‘பல்கலைக்கழக துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் மாணிக்கம், பிரிவு அதிகாரி சேகர் ஆகிய இருவரும் கடந்த 18ம் தேதி சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தின் பாலம் அருகே நடைபயிற்சி சென்ற போது அங்கு பல்கலைக்கழக சான்றிதழ் கிடைத்ததாகவும், அது குறித்து சரிபார்த்தபோது அவை அனைத்தும் போலி என தெரிய வந்ததாகவும், அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த தீட்சிதர் சங்கர் (29), சிதம்பரம் மீதிகுடி மெயின் ரோடு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த நாகப்பன்(50) ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து, சான்றிதழ் கிடைத்த இடம் கிள்ளை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் கிள்ளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில், கிள்ளை போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரில் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிந்து கைது செய்து, சான்றிதழ் தயாரிப்பதற்காக பயன்படுத்திய அச்சு இயந்திரம், லேப்டாப், செல்போன், ஹோலோகிராம் ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருள்களை கிள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

The post சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: