வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

வயநாடு : வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ராகுல்காந்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில் எந்த தொகுதியை ராகுல் காந்தி பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியாகாந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர்கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ராகுல்காந்தி எந்த தொகுதியில் எம்பியாக இருப்பது அல்லது எந்த தொகுதியை ராஜினாமா செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மக்களவையில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்பது குறித்தும் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் எம்பியாக நீடிப்பார். வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராகுல்காந்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இது தொடர்பான கடிதம் மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

The post வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: