பால்வளத்துறையில் ஆவின் புதிய புரட்சி 3 ஆண்டுகளில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி: நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.57 சதவீதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ஆவின் நிறுவனம் மூலம் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து சரித்திர சாதனை படைத்துள்ளது. உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ஆவின் நிறுவனம் மூலம் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடுத்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது கிராம அளவில் மொத்தம் 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் செயல்பாட்டில் உளள 9,189 சங்கங்களில் 1,856 சங்கங்கள் மகளிர் சங்கங்களாகச் செயல்படுகின்றன.

* பால் கொள்முதல் மற்றும் விநியோகம்
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக, 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 22.7.2021 அன்று ஆவின் நிறுவனம் 43.05 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், பால் கொள்முதலை அதிகரிக்கும் பொருட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 342 பாலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பால் உற்பத்தியாளர்கள் நலன்
* 2022-23ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* 2022-23ம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74 லட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 லட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் ரூ.38.63 லட்சம் ஆதரவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 85% மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஆவின் நிறுவனம் சென்னை மாநகரில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 15.22 லட்சம் லிட்டர் விற்பனை செய்துள்ளது. மேலும், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் அதிகபட்சமாக 16.37 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்தும் சாதனை படைத்துள்ளது.
* 2023-24ம் ஆண்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 31.37 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* 2021ம் ஆண்டு பால் விற்பனையை ஒப்பிடும்போது தற்போது 2024ம் ஆண்டு ஏறத்தாழ 23% அதிகரித்துள்ளது.
* தமிழ்நாடெங்கும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆவின் பாலை ஒரே மாதிரியாக வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய வடிவமைப்பிலான பால் பாக்கெட்டுகள் இணையம் மற்றும் ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* மாற்றியமைக்கப்பட்ட பேக்கிங் முறையில் பால் பொருள்களைச் சிப்பம் கட்டுதல் மற்றும் அவற்றின் தரத்தினைத் தொடர்ந்து கண்காணிப்பதனால் இனிப்பு வகைகளின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* பொது மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டையை விண்ணப்பிக்கவும் மற்றும் புதுப்பிக்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டது. இந்த எளிய நடை முறை மூலம் சுமார் 58650 பால் அட்டை விண்ணப்பங்கள் கடந்த மூன்று மாதங்களில் புதிப்பிக்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் இதர விற்பனை நிலையங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையை துவக்கிடவும் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனையை உயர்த்திடவும் பிரத்தியோக ஐஸ்கிரீம் மொத்த விற்பனையாளர்கள் நியமித்து விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஸ்கிரீம் விநியோகத்தை தமிழ்நாடு முழுவதும் எளிதாக கொண்டு சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* கோடைக்காலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் ஐஸ் கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யதுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் ஆவின் ஐஸ் கிரீம் கிடைப்பதை உறுதி செய்ய 33 பேட்டரி வண்டிகள் மூலம் ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* சென்னை தீவு திடலில் நடைபெற்ற 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் ஆவின் நிறுவனத்தின் சார்பாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு ஆவின் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி நிலைகள் கண்காட்சி அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
* வளர்ந்து வரும், மின்னணு மற்றும் இணையவழி வணிகத்தில் ஆவின் நிறுவனம் தனது சந்தை மதிப்பை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மின்வணிக முறையில் பிக் பாஸ்கெட், ஸ்விக்கி, ஸோமாட்டோ, ரிலையன்ஸ், ஜியோமார்ட், பிலிங்க்கிட் மற்றும் ஸிப்டோ மூலம் சந்தைப்படுத்தியுள்ளது.
* 2023-24ம் ஆண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மின்னணு மற்றும் இணையவழி வணிகம் மூலம் சுமார் 30.19 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

The post பால்வளத்துறையில் ஆவின் புதிய புரட்சி 3 ஆண்டுகளில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி: நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.57 சதவீதம் appeared first on Dinakaran.

Related Stories: