செம்மஞ்சேரியில் அமைக்கப்பட உள்ள மெகா விளையாட்டு நகரத்திற்கு சி.எம்.டி.ஏ டெண்டர் கோரியது

* 105 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க திட்டம்

* 20க்கு மேற்பட்ட விளையாட்டு அரங்கம் தயாராகிறது

மாமல்லபுரம்: செம்மஞ்சேரியில் ‘மெகா விளையாட்டு நகரம்’ அமைக்க சி.எம்.டி.ஏ தரப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு துறைகளில் தமிழகம் முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையை உலக அரங்குகளில் தனி முத்திரை பதிக்கும் வண்ணம் அதற்கான நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு அதனை திறம்பட நிறைவேற்றியும் வருகின்றார்.

குறிப்பாக, சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி, மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் போன்ற போட்டிகள் மூலம் தமிழ்நாடு உலக போட்டிகள் நடத்த ஒரு சிறந்த மாநிலமாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பெரிய அரங்குகள் உள்ளன. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தும் அளவுக்கு, இந்த அரங்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அனைத்து விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், போட்டிகள் நடத்துவதற்கும் தனியாக விளையாட்டு நகரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.இதனடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) நிதியில் சென்னையில் உலக தரத்திலான ‘மெகா ஸ்போர்ட் சிட்டி’ எனும் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பழைய மாமல்லபுரம் சாலையில், சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை போன்ற இடங்களில் இந்த விளையாட்டு நகரத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என கண்டறியப்பட்டது. இதனையடுத்து, செம்மஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது இதற்கான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

இந்த விளையாட்டு நகரம் ஓஎம்ஆர் சாலையில் சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு அருகில் 105 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.  இங்கு டேபிள் டென்னிஸ் அரங்கம், வாலிபால் மைதானம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள், ஹாக்கி மைதானம், நீச்சல் குளம் உள்பட 20க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் வீரர்கள் தங்கும் அறைகள், பணியாளர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் மிகப்பெரிய மைதானம் அமைக்கப்பட இருக்கின்றன. மேலும், சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக விமான நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் வகையில் இடம் தேர்வு செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தது.

இங்கு, நீச்சல் குளத்துடன் கூடிய வளாகம், பேட்மிண்டன் கோர்ட், டேபிள் டென்னிஸ்கோர்ட், வாலிபால் விளையாடுவதற்கு மைதானங்கள், ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறும் வகையில் தனியாக இடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

அவ்வாறு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் இங்கேயே தங்கி பயிற்சி பெறும் வகையில் அவர்களுக்கு தங்கும் அறைகள் அமைக்கப்பட இருக்கின்றன. அங்கு வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு என்று தனியாக குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் அங்கேயே உணவகங்கள் ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்த திட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றனர்.

The post செம்மஞ்சேரியில் அமைக்கப்பட உள்ள மெகா விளையாட்டு நகரத்திற்கு சி.எம்.டி.ஏ டெண்டர் கோரியது appeared first on Dinakaran.

Related Stories: