கோவளத்தில் கடற்கரையில் காணாமல் போன குழந்தை மீட்பு: பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

திருப்போரூர்: கோவளம் கடற்கரையில் காணாமல் போன குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், அக்குழந்தையை மீட்டு கோவளம் பெருமாள் கோயில் வாசல் அருகில் கடை வைத்திருக்கும் அக்பர் என்பவரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை தேடி பெற்றோர் வந்தால், ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து அக்பர், இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கேளம்பாக்கம் ரோந்து போலீசார் குழந்தையை அக்பரிடம் இருந்து அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து பால், பிஸ்கட் வாங்கிக் கொடுத்தனர். இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரியா (30) என்ற பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கோவளம் கடற்கரையில் தானும், தனது கணவர் ஜோதிபாசுவும் பாட்டில் பொறுக்கும் தொழில் செய்து வருவதாகவும், மது அருந்து விட்டு தூங்கி விட்டதால் உடன் படுத்திருந்த குழந்தையைக் காணவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவளம் கடற்கரையில் தனியாக சுற்றித்திரிந்த குழந்தை கேளம்பாக்கம் போலீசார் வசம் இருப்பதாக தெரிவித்த தகவலையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் பிரியாவை கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பிரியாவும் அவரது கணவர் ஜோதிபாசுவும் கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு நடந்ததைக் கூறி குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். மது அருந்திவிட்டு கடற்கரை மற்றும் குப்பை பொறுக்கும் இடங்களில் படுத்து உறங்கக்கூடாது என்றும், குழந்தையை கவனமாக பாதுகாக்குமாறும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post கோவளத்தில் கடற்கரையில் காணாமல் போன குழந்தை மீட்பு: பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: