பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர், செஞ்சி வாரச்சந்தையில் ₹13 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர், ஜூன் 15: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர், செஞ்சி வாரச்சந்தையில் நேற்று ரூ.13 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகை வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடலூர் மாவட்டம், வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் வார ஆடுச்சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் சந்தை வளாகத்தில் நடந்தது. இந்த வார ஆடுச் சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளான சேப்பாக்கம், குளவாய், காட்டுமயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன்குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனை செய்தனர். மேலும் ஆத்தூர், திருச்சி, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்து இறைச்சி கடை வியாபாரிகள் இறைச்சிக்காக ஆடுகளை இங்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்தனர்.

இந்த சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை நடந்தது. திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆட்டின் விலை எடைக்கு ஏற்றாற்போல் ரூ.7000, ரூ.9000, ரூ.12000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

விடிய விடிய நடந்த ஆட்டுச்சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். இதுபோன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று நடந்த வார சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல வியாபாரிகள் வேனில் வந்திருந்தனர். இதில் ஒரு ஆடு குறைந்த விலை 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. சுமார் 6 கோடிக்கு விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகை என்பதால் எப்போதுமே ஆடு விற்பனை சற்று விலை கூடுதலாக விற்பனையாகும் என்பதால் நாங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்துள்ளோம். குறைந்தது 6000த்தில் இருந்து 50,000 வரையிலும் ஆடுகள் விற்பனையானது மகிழ்ச்சியை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர், செஞ்சி வாரச்சந்தையில் ₹13 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: